தாயுடன் காணாமல்போன 2 குழந்தைகள் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தாயை காணவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
குஜராத் மாநிலம் ஜாம்நகர் மாவட்டம் தாஹோத் பகுதியைச் சேர்ந்த பதியா பலாஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் நித்தேஷ் தங்கரியா என்பவரின் பண்ணையில் கூலி வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று (அக்.15) மாலை வீடு திரும்பிய பதியா, தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளைக் காணாமல் திகைத்துள்ளார். தொடர்ந்து அவர்களை எங்கு தேடியும் கிடைக்காததால் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர், காணாமல் போனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், 5 வயது குழந்தையான தேவராஜ் மற்றும் 3 மாத குழந்தை ரியா ஆகியோரின் உடல்கள் கிணறுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிந்துள்ள காவல்துறையினர், பதியா பலாஷின் மனைவியை தேடி வருகின்றனர். பதியாவின் மனைவி தற்கொலை செய்து கொண்டிருக்காவிட்டால், அவர் தான் குழந்தைகளை கிணற்றில் வீசியிருக்க வேண்டும் எனவும் காவல்துறையினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.