முதலிரவின் போது மாப்பிள்ளை மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில் வசித்து வந்தவர் துளசி பிரசாத் (25). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும் (23) காதல் திருமணம் நடைபெற்றது. எளிய முறையில் திருமணம் நடைபெற்றதை அடுத்து, மணமகள் வீட்டில் முதலிரவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இதற்காக துளசி பிரசாத் தனது மாமியார் வீட்டில் இருந்துள்ளார். சிறிது நேரம் உறவினர்களுடன் பேசிவிட்டு பின்னர் துளசி பிரசாத்தும் அவரது மனைவியும் முதலிரவு அறைக்குள் நுழைந்துள்ளனர். சற்று நேரத்தில் பதறி அடித்துக் கொண்டு வெளியில் ஓடிவந்த மனைவி, தனது கணவர் மயக்கம் அடைந்துவிட்டதாக தெரிவித்தார்.
பின்னர், குடும்பத்தினர் துளசி பிரசாத்தை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், துளசி பிரசாத்தின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறு மரணங்கள் மிக அபூர்வமாகதான் ஏற்படும் என்று பாலியல் மருத்துவர்கள் சொல்கின்றனர். குறிப்பாக இதய நோய் உள்ளவர்கள், மாரடைப்பு வந்தவர்கள், பைபாஸ் சிகிச்சை செய்து கொண்டவர்கள், இதயத்தில் ஸ்டன்ட் வைத்துக்கொண்டவர்கள் ஆகியோருக்கு இந்த அபாயம் இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும், இந்த பாதிப்பு உள்ளவர்கள் உரிய மருத்துவ பரிசோதனைக்கு பின்னரே உடலுறவில் ஈடுபட வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.