ஒருதலைக் காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவியை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்த நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
புதுச்சேரி மாநிலம் சன்னியாசி குப்பம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகள் கீர்த்தனா (18) அரசு கலைக்கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். மாணவி கீர்த்தனாவை அவரது உறவினர் முகேஷ் என்பவர் ஒரு தலைப்பட்சமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு கீர்த்தனா தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்ததால், கீர்த்தனாவிடம் அவர் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று கீர்த்தனா கல்லூரி முடிந்து வீட்டிற்கு வந்தபோது தனியார் பேருந்தில் இருந்து சன்னியாசி குப்பம் கடைவீதியில் இறங்கி வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு வந்த முகேஷ் மறைத்து வைத்திருந்த கத்தியால் கீர்த்தனாவின் கழுத்து, கை, கால்களில் சரமாரியாக குத்திக் கொலை செய்துள்ளார்.
இதில் நிலைகுலைந்த கீர்த்தனா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த திருபுவனை போலீசார், கீர்த்தனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் தப்பியோடிய முகேஷை தீவிரமாக தேடி வருகின்றனர். மாணவி படுகொலை வழக்கில் தேடப்படும் முகேஷ் மீது ஏற்கனவே மதுபான கடையில் நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.