நவராத்திரியை முன்னிட்டு மக்களிடம் பணம் வசூல் செய்ய சாமியார் ஒருவர் ஜீவசமாதி ஆகப் போவதாக குழிக்குள் இறங்கிய சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் தாஜ்பூர் என்ற கிராமத்தில் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் நோக்குடன் ஜீவசமாதி ஆகப் போகிறேன் என போலி சாமியார் ஒருவர் 6 அடி ஆழம் கொண்ட பள்ளத்தில் அமர்ந்து கொண்டார். இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்தனர்.
இதையடுத்து, மூங்கில் குச்சிகளால் மூடப்பட்டிருந்த அந்த 6 அடி குழிக்குள் இறங்கிய போலீசார், உள்ளே அமர்ந்திருந்த ஒரு நபர் மற்றும் மேலே அமர்ந்து பூஜைகள் செய்து கொண்டிருந்த இரு நபர்கள் என மொத்தம் மூவரை அதிரடியாக காவல்துறையினர் கைது செய்தனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.