பிரபல பெங்காலி நடிகை ஐந்த்ரிலா சர்மா உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
பெங்காலி நடிகை ஐந்த்ரிலா சர்மா (Aindrila Sharma) தனது 24 வயதில் காலமானார். நடிகை ஐந்த்ரிலா சர்மா, கடந்த சில வாரங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அவருக்கு மீண்டும் மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் நினைவு திரும்பாமலே இன்று (நவ.20) அவர் உயிரிழந்தார். முன்னதாக, நவம்பர் 1ஆம் தேதி ஐந்த்ரிலா சர்மாவுக்கு மூளை சாவு ஏற்பட்டது. அவரின் மண்டையோட்டுக்குள் ரத்தக்கசிவு ஏற்பட்டது. இதனால், இடது முன்பக்க டெம்போரோபரியட்டல் டி-கம்ப்ரசிவ் கிரானியோட்டமி அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது.
ஐந்த்ரிலா சர்மா, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர். மேற்கு வங்காளத்தில் உள்ள பெர்ஹாம்பூரில் பிறந்து வளர்ந்தார். அவர் ஜுமுர் மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து, மகாபீத் தாராபீத், ஜிபோன் ஜோதி மற்றும் ஜியோன் கதி போன்ற நிகழ்ச்சிகளில் நடித்துள்ளார். இது தவிர அமி திதி நம்பர் 1 மற்றும் லவ் கஃபே போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.