பிரபல பாலிவுட் சீரியல் நடிகை வீணா கபூரை சொத்துக்காக அவரது சொந்த மகனே அடித்து படுகொலை செய்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் வசித்து வருபவர் வீணா கபூர் (74). இவர், பாலிவுட்டில் பழம்பெரும் சின்னத்திரை நடிகை ஆவார். இவருக்கு 2 மகன்கள் இருக்கும் நிலையில், இவர் தனது இரண்டாவது மகனான சச்சினுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், அமெரிக்காவில் இருக்கும் இவரது மூத்த மகன், இவருக்கு போன் செய்துள்ளார். பலமுறை போன் செய்தும் எடுக்கவில்லை என்பதால் பதற்றமடைந்த அவர், பக்கத்து வீட்டாரை தொடர்பு கொண்டு வீட்டில் பார்க்கும்படி கூறியுள்ளார். பின்னர் அவர்கள் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீணா இல்லை என்பதால் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதைத்தொடர்ந்து அவர்கள் வந்து இளைய மகனிடம் விசாரணை மேற்கொண்டதில், அவரது பதில் சந்தேகத்திற்குரிய வகையில் இருந்துள்ளது. பின்னர், அவரிடம் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில் தனது தாயை தானே கொன்றதாக அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதுகுறித்து காவல்துறை அதிகாரி கூறுகையில், “பழம்பெரும் நடிகை வீணா கபூர் அவரது இரண்டாவது மகனுடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுமார் 12 கோடி மதிப்பிலான அடுக்குமாடிக் குடியிருப்பு இருக்கிறது. அதனை தனது பெயருக்கு மாற்றி தரும்படி அவரது மகன் சச்சின் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார். ஆனால் வீணாவோ, அதனை கொடுக்க மறுத்துள்ளார். அதே போல் சம்பவத்தன்று இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, ஆத்திரமடைந்த மகன், தனது வயது முதிர்ந்த தாய் என்றும் பாராமல், அவரை பேஸ்பால் விளையாடும் மட்டையை கொண்டு சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சடலத்தை மறைப்பதற்காக, மகனும், அவரது வீட்டில் வேலை செய்யும் மண்டல் என்பவரும் சேர்ந்து வீணாவின் சடலத்தை ஒரு பெட்டியில் அடைத்துள்ளனர். பின்னர் அதனை காரில் எடுத்துச் சென்று சுமார் 90 கி.மீ., தொலைவில் உள்ள ஆற்றில் தூக்கி வீசியுள்ள்ளனர். தற்போது வீணாவின் மகன் சச்சினையும், அவருக்கு துணையாக இருந்த மண்டல் என்பவரையும் கைது செய்து மேற்கொண்டு விசாரித்து வருகிறோம்” என்றார்.