பெற்ற மகனே தாயை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏறபடுத்தியுள்ளது.
மத்தியப்பிரதேசத்தின் திகம்கர் நகரை சேர்ந்தவர் ரமேஷ் ராஜக். இவருக்கு 11 வயதில் ஒரு மகன் உள்ளார். கடந்த திங்கட்கிழமை இவர் வழக்கம்போல் வேலை சென்றுவிட்ட நிலையில், இவரது மனைவியும், மகனும் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது, 11 வயது மகனை அவரது தாய் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த மகன் தனது தந்தை உரிமம் பெற்று வீட்டில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து, தாயை சுட்டுள்ளான். பின்னர், அந்த சிறுவனே போலீசுக்கு தகவல் கொடுத்து, அவர்கள் வரும் வரை காத்திருந்துள்ளான். இதையடுத்து, அங்கு விரைந்த போலீசார், அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், இறந்த பெண்ணின் 11 வயது மகன், மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் மதுபானம் குடித்துவிட்டு தாயிடம் அடிக்கடி சண்டை போட்டு கொண்டதாகவும் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசாரிடம் அந்த சிறுவன் கூறியதாவது, “தனது தாய் தன்னிடம் அடிக்கடி சண்டை போடுகிறார். என்னை அடிக்கடி திட்ட மட்டுமே செய்கிறார். தன் மீது அன்பு காட்டுவதில்லை. எந்த காரணமும் இல்லாமல் தன்னை அடிக்கடி அடித்துள்ளார். இதனால் ஆத்திரத்தில் தனது தாயை சுட்டுக் கொன்றேன்” வாக்குமூலம் அளித்துள்ளார். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.