இந்தியாவின் சந்து, பொந்து, மெயின் ரோடு என எங்கு திரும்பினாலும் டிராஃபிக் இல்லாத ஏரியாக்களை காண்பதே அரிதுதான்.
அதுவும் மெட்ரோ நகரங்கள் என்றால் அதிக ஹாரன், ஓவர் டேக்களுக்கு பஞ்சமே இருக்காது. ஆனாலும், ஒரு சில இடங்களில் அத்தி பூத்தார் போல போக்குவரத்து விதிகளை முறையாக பின்பற்றி வரும் மக்களும் இதே இந்தியாவில்தான் இருக்கிறார்கள். அதன்படி, வடகிழக்கு இந்திய மாநிலங்களில் ஒன்றான மிசோரமில் மக்கள் கார், பைக்குகளை ஓட்டிச் செல்வது ஏதோ முப்படையினர் அணிவகுத்துச் செல்வது போலவே இருக்கிறது. ஐஸ்வால் பகுதியில் போக்குவரத்துக்கு எந்த சிரமும் இல்லாமல் அத்தனை சிறப்பாக வாகனங்களை ஓட்டிச் செல்லும் வீடியோதான் நெட்டிசன்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

அந்த வீடியோ டிராவல் பிளாகரான எலிசபெத் என்பவது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டிருக்கிறது. அதில், வலது பக்கத்தின் சாலை ஓரத்தில் நீண்ட வரிசையில் கார்கள் பார்க் செய்யப்பட்டும், அதன் பக்கவாட்டில் ஒரு புறம் பைக்குகளும், நடுவில் கார்களும் எந்த சிரமமும் இல்லாமல் வரிசையாக ஒலி எழுப்பாமல், ஒன்றோடு ஒன்று முட்டி மோதிக்கொள்ளாமல் செல்வதை காண முடிகிறது. இதனாலேயே மிசோரமின் ஐஸ்வால் நகரத்தை இந்தியாவின் சைலன்ட் சிட்டி என்றும் அழைக்கப்படுகிறது. இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால், டுவீலரில் செல்லும் அனைவரும் ஹெல்மெட் அணிந்தபடியே சென்றிருக்கிறார்கள். இது தொடர்பான அந்த பதிவில், ‘இந்தியாவின் மற்ற நகரங்களில் வசிப்பவர்கள் மிசோரமின் ஐஸ்வால் மக்களிடம் இருந்து டிராஃபிக்கில் எப்படி செயல்பட வேண்டும் என்பதை கற்றுக்கொள்ள வேண்டும்’ எனக் கேப்ஷன் இடப்பட்டிருக்கிறது.