தெலங்கானா மாநிலம் சூர்யா பேட்டை பகுதியில் சந்தோஷ் என்ற இளைஞரை வழிமறித்த 3 பேர், அவரை மாறி மாறி கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றுள்ளனர். பின்னர், 3 பேரில் ஒருவர் சந்தோஷின் தலையில் கல்லை போட்டு கொலை செய்ய முயன்றுள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அவர்களை தடுத்து நிறுத்தினர். பொதுமக்கள் ஒன்று கூடியதை அடுத்து கொலை முயற்சியில் ஈடுபட்ட 3 பேரும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், படுகாயம் அடைந்த சந்தோஷத்தை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விளக்கமளித்த போலீசார், “தற்போது கொலை முயற்சியில் ஈடுபட்ட பண்டி என்பவர் மீது கடந்த 2021ஆம் ஆண்டு கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த தாக்குதலில் சந்தோஷ் உள்ளிட்ட இரண்டு பேர் சிறைக்கு சென்று ஜாமீனில் வெளியே வந்தனர்”.
இந்நிலையில் புகாரை வாபஸ் வாங்கவில்லை என்றால் கொலை செய்துவிடுவேன் என்று சந்தோஷ் பண்டியை மிரட்டியதாகவும், இதில் ஆத்திரமடைந்த பண்டி தனது நண்பர்களுடன் சேர்ந்து சந்தோஷை கொல்ல முயற்சி செய்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய பண்டி, மகேஷ், சன்னி ஆகியோரை தேடி வருகின்றனர்.