மேற்கு வங்க மாநிலம் புருஸலியா மாவட்டத்தில் ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சி பிரிவில் உள்ள கோட்ஷிலா – முரி பிரிவில் அமைந்துள்ளது பெகுன்கோடர் ரயில் நிலையம். இந்த ரயில் நிலையம் 42 ஆண்டுகளாக செயல்பாட்டில் இல்லாமல் மூடியே கிடக்கிறது. 1960களில் சந்தலின் ராணி லச்சன் குமாரியின் முயற்சியால் இந்த ரயில்நிலையம் கட்டப்பட்டது. இதனால், அப்பகுதி மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், அந்த மகிழ்ச்சி 6 ஆண்டுகள் வரை மட்டுமே நீடித்தது.
1967ஆம் ஆண்டு இந்த ரயில் நிலையத்தில் ஸ்டேஷன் மாஸ்டர் ஒருவர் ரயில் டிராக்கில் ஒரு மந்திரவாதியை பார்த்துள்ளார். அவர் கூறியது போலவே பெண் மந்திரவாதி வெள்ளை நிற சேலை அணிந்திருந்தார். இரவுநேரங்களில் ரயில் பாதைகளில் சுற்றி வந்ததாகவும் அவர் கூறியிருந்தார். இந்த வதந்தி பரவிய நிலையில் மேலும் பலர் இது போல் மந்திரவாதியை பார்த்ததாக கூறினர்.
இந்த ரயில் நிலையத்தில் தற்கொலை செய்து கொண்ட சிறுமி ஒருவர் மந்திரவாதி ஆகிவிட்டார் என அப்பகுதி மக்கள் பேசத் தொடங்கினர். இந்திய ரயில்வேயில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்த சுபாஷிஷ் தத்தா ராய் இந்த ரயில் நிலையம் குறித்து கதையாக எழுதியிருந்தார். ரயில்வே நிர்வாகம் இந்த வதந்திகளை மறுத்தாலும் சில நாட்களுக்கு பிறகு ஸ்டேஷன் மாஸ்டரும் அவருடைய குடும்பத்தினரும் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடந்தனர்.
பின்னர் தான் இந்த சம்பவம் உண்மை என நம்ப வைத்தது. ஸ்டேஷன் மாஸ்டர் இறந்த பிறகு, இங்கு பணிக்கு வரவே ஊழியர்கள் பயந்துவிட்டனர். ரயில் நிலையத்தில் ரயில்கள் நிறுத்தப்பட்டன. இந்த ரயில் நிலையத்தில் ஊழியர்களை பணியமர்த்த ரயில்வே நிர்வாகம் முயற்சித்தது. ஆனால், யாரும் செல்லவில்லை. இதனால் அந்த ரயில் நிலையம் மூடப்பட்டது. இந்த ரயில் நிலையத்தை ரயில் கடக்கும் போது ஒரு வித அச்சம் பயணிகளுக்கு ஏற்படுமாம்.
1990களில் இந்த ரயில் நிலையத்தை மீண்டும் தொடங்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, ரயில்வே நிர்வாகமும் இதை பற்றி யோசிக்க ஆரம்பித்தது. இதைத் தொடர்ந்து 42 ஆண்டுகளுக்கு பிறகு 2009ஆம் ஆண்டு ரயில்வே துறை அமைச்சராக மம்தா பானர்ஜி இருந்த போது பெகுன்கோடார் ரயில் நிலையம் மீண்டும் திறக்கப்பட்டது. இது ரயில் நிறுத்துமிடமாக மாறியது. இன்றும் இங்கு எந்த ரயில்வே ஊழியரும் நியமிக்கப்படவில்லை. மாலை நேரத்தில் விலங்குகள் கூட இந்த ரயில் நிலையத்திற்கு வரவே வராது.