கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கோவளம் பைபாஸ் சாலையில் நேற்று அதிகாலை இளைஞர்கள் சிலர் பைக் ரேசில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, திருவளம் பகுதியைச் சேர்ந்த 53 வயதான சிந்து என்ற பெண் சாலையோரம் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். நடைபயிற்சியின் போது சிந்து பைப்பாஸ் சாலையை கடக்க முயற்சித்துள்ளார். அப்போது, ரேசில் 24 வயது இளைஞர் ஓட்டி வந்த பைக் சிந்து மீது அதிவேகமாக மோதியதில் தூக்கி வீசப்பட்டார். இந்த விபத்தில், பலத்த காயமடைந்த சிந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த விபத்தில் பைக்கை ஓட்டி வந்த இளைஞர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சாலைகளில் இளைஞர்கள் மேற்கொள்ளும் பைக் ரேஸ்களால் விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. பைக் ரேசை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தபோதும் சட்டவிரோதமாக இளைஞர்கள் பைக் ரேசில் ஈடுபடும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது.