வயதான மாமியாரை பல ஆண்டுகளாக கொடூரமாக சித்ரவதை செய்து வந்த மருமகளால் மாமியாரின் கண்பார்வை பறிபோன சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கொல்லம் பகுதியை அடுத்த புந்தலதழம் பகுதியைச் சேர்ந்தவர் நளினி (67). இவரது கணவர் பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார். இதனால் இவர் தனது மகன் – மருமகளுடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், தனது வயதான மாமியார் தங்களுடன் இருப்பது பிடிக்காத மருமகள் அவரை அடிக்கடி சித்ரவதை செய்து வந்துள்ளார். மேலும், அடித்து துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. அதோடு அவருக்கு நேரத்திற்கு சரியான சாப்பாடு, தண்ணீர் என்று எதுவும் கொடுக்காமல் கொடுமைப்படுத்தியும் வந்துள்ளார். இந்த கொடுமைகளையெல்லாம் சகித்துக் கொண்டு மாமியாரும் வேறு வழியின்றி தனது மகன் வீட்டில் தங்கியிருந்துள்ளார்.
மருமகள் அடித்ததால், மூதாட்டியின் உடலில் பல்வேறு இடங்களிலும் இரத்த கீறல்கள், காயங்கள் இருந்துள்ளது. மருமகள் கொடுமைப்படுத்தி வந்ததை மகனும் தடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது சுமார் 4 ஆண்டுகளாக தொடர் கதையாக இருந்து வந்துள்ளது. இந்நிலையில், தனது மூதாட்டி நளினி கொடுமைப்படுத்தப்படுகிறார் என்பதை அறிந்த மூதாட்டியின் சகோதரர், அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கே அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் மிகவும் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மேலும் அவருக்கு ஒரு கண் பார்வை பறிபோனதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதைக்கேட்டு அதிர்ந்துபோன மூதாட்டியின் சகோதரர், இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் மூதாட்டியிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் தனது மருமகளை குறித்து வாக்குமூலம் அளித்தார். இதற்கிடையே, மாமியாரை தாக்கிய வழக்கில் தான் கைது செய்யப்படுவதை எண்ணிய மருமகள், தலைமறைவாகியுள்ளார். இதையடுத்து மருமகள் மீது வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் அவரை தேடி வருகின்றனர். வயதான மாமியாரை பல ஆண்டுகளாக கொடூரமாக சித்ரவதை செய்து வந்த மருமகளின் செயல் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.