ஹோட்டல் அறையில் இருந்து காதலன் வெளியே சென்ற நிலையில், போலீசார் அறையின் கதவை திறந்து பார்த்தபோது காதலி ரத்த வெள்ளத்தில் மிதந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் ஹரலஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் அபூர்வா ஷெட்டி (21). அங்குள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வரும் இவரும், ஹின்கல் பகுதியைச் சேர்ந்த ஆஷிக் என்ற இளைஞரும் காதலித்து வந்துள்ளனர். அபூர்வா வீட்டிற்கும் கல்லூரிக்கும் நீண்ட தூரம் என்பதால், அருகில் இருக்கும் விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி அபூர்வாவும், அவரது காதலர் ஆஷிக்கும் அந்த பகுதியில் உள்ள சொகுசு ஹோட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கியுள்ளனர்.
இதையடுத்து, கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஹோட்டலை காலி செய்யாமல் அதிகாலையிலேயே வெளியே சென்றுள்ளார் ஆஷிக். நீண்ட நேரமாகியும் அவர் ஹோட்டல் திரும்பவில்லை. அறையில் இருந்த அபூர்வாவும் வெளியே வராததால், அவர்களை ஊழியர்கள் தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால், அதற்கு சரிவர பதில் வராததால் சந்தேகமடைந்த ஹோட்டல் ஊழியர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு வந்த அதிகாரிகள் வேறு சாவியை பயன்படுத்தி கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, அபூர்வா வாயில் இரத்தம் வழிய நிர்வாண கோலத்தில் சடலமாக கிடந்துள்ளார்.
இதையடுத்து, அவரது உடலை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பிய பின் விசாரணை மேற்கொண்ட போலீசார், அவர்கள் இருவரும் காதலர்கள் என்றும், இவர்கள் காதல் விவகாரம் அபூர்வாவின் குடும்பத்தினருக்கு தெரியவர, அவர்கள் இருவரையும் கண்டித்துள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவான ஆஷிக்கை தேடி வந்த போலீசார் அவரை கைது செய்து, கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.