மளிகைப் பொருட்களை கொடுக்க வந்த டெலிவரி ஊழியர், வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
மும்பையில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் இளம்பெண் ஒருவர் மளிகைப் பொருட்கள் வாங்குவதற்காக ‘செப்டோ’ என்ற ஆப் மூலம் ஆர்டர் செய்துள்ளார். சில மணி நேரத்தில் ஆர்டருடன் செப்டோ ஊழியர் வந்தார். அப்போது ஆர்டரை கொடுத்துவிட்டு அந்த பெண்ணை புகைப்படம், வீடியோ எடுக்கத் தொடங்கியுள்ளார். இதனை அறிந்த அந்த பெண் அந்த செல்போனை வாங்கினார். பின்பு இருவருக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வீட்டின் கதவுக்கு வெளியே நின்று கொண்டிருந்த ஊழியர், திடீரென உள்ளே வந்து, அந்த பெண்ணை தாக்கி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அந்த பெண் சத்தம் போட்டதை அடுத்து அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, அங்கு விரைந்த போலீசார், டெலிவரி ஊழியரை கைது செய்து விசாரணை நடத்தினர். அண்டைதானே மாவட்டத்தில் உள்ள மும்ப்ரா பகுதியைச் சேர்ந்த 42 வயதான ஷாஜேட் ஷேக் என்பவர் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகார் அளித்தார். அதற்கு செப்டோ நிறுவனம் பதிலளித்துள்ளது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவருக்கு உரிய தண்டனை கிடைக்கப்படும் என்று செப்டோ நிறுவனம் கூறியுள்ளது. மும்பையில் இதுபோன்ற சம்பவங்கள் அடுத்தடுத்து நிகழ்வது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் கூட மும்பையில் தென்கொரியாவைச் சேர்ந்த பெண் யூடியூபர் ஒருவர், மும்பையின் தெருக்களில் நேரலை வீடியோ பதிவிட்டுக்கொண்டிருந்த போது வாலிபர்கள் இருவர் அந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றது பெரும் பரபரப்பை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.