உத்தரப்பிரதேசத்தில் சிகிச்சைக்கு வந்த பெண்ணுக்கு போதை ஊசி போட்டு மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள திபிநகர் கிராமத்தில் வசிக்கும் பெண் நோயாளி ஒருவர் கடந்த 4 மாதங்களுக்கு முன், அந்த கிராமத்தை சேர்ந்த மருத்துவரிடம் சிகிச்சை பெற சென்றுள்ளார். அப்போது, அந்த பெண்ணிற்கு சிகிச்சை என்ற பெயரில் மருத்துவர் போதை ஊசி செலுத்தியுள்ளார். பின்னர் யாரும் இல்லாததை உறுதி செய்த பிறகு, அந்த பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார். இதனை வீடியோவாக எடுத்து, அதை சமூக வலைத்தளங்களில் வைரலாக்குவேன் என மிரட்டி பலமுறை செக்ஸ் வைத்துள்ளார்.

மேலும், அந்த மருத்துவர் அந்த பெண்ணை தன்னுடனே தங்குமாறு வற்புறுத்தியும் வந்துள்ளார். இதற்குமேல் மறைத்தால் விளைவு பெரிதாகிவிடும் என்று பயந்துபோன அந்த பெண், தன் கணவரிடம் நடந்த அனைத்தையும் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அந்த பெண் மற்றும் அவரது கணவர் திபிநகர் காவல்நிலையத்தில் மருத்துவர் மீது புகார் அளித்துள்ளனர். ஆனால், காவல்துறையினர் அந்த புகாரை ஏற்க மறுத்துள்ளனர். இதனால், பொறுமையிழந்த அந்த பெண் அம்மாநில முதலமைச்சரின் ட்விட்டர் பக்கத்தில் தனக்கு நடந்த கொடுமை குறித்து ட்வீட் செய்துள்ளார். இந்த விவகாரம் அதிகாரிகளுக்கு எட்டியதையடுத்து, கடந்த செவ்வாய்கிழமை அந்த கிராமத்திற்கு சென்றுள்ளனர். முன்கூட்டியே தகவலறிந்து கொண்ட குற்றம் சாட்டப்பட்ட மருத்துவர் கிராமத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளார். அந்த பெண்ணின் புகாரில் தற்போது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.