நிச்சயதார்த்தம் நடக்க இருந்த பெண்ணை அவரது வீடு புகுந்து 50 பேர் கொண்ட கும்பல் கடத்தி சென்ற பரபரப்பு சம்பவம் தெலங்கானாவில் அரங்கேறியுள்ளது.
தெலங்கானா மாநிலம் ரெங்கா ரெட்டி மாவட்டத்தின் அடிபட்லா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் 24 வயது இளம்பெண் வைஷாலி. ஓய்வு பெற்ற ராணுவ வீரர் தாமோதர் ரெட்டியின் மகளான வைஷாலி, பல் மருத்துவராக உள்ளார். இவருக்கு திருமண வரன் பார்க்கப்பட்டு சில நாட்களில் நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் வைஷாலி தனது குடும்பத்தினருடன் வீட்டில் இருந்தபோது அங்கு வாகனங்களில் சுமார் 50 பேர் கொண்ட கும்பல் கம்பு உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்துள்ளனர். அந்த கும்பல் வீட்டிற்குள் புகுந்து அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை உடைத்து, பொருட்களை தூக்கி வீசி பெண் வைஷாலியை பலவந்தமாக காரில் ஏற்றி கடத்தி சென்றனர். இந்த சம்பவத்தால் பதறிப்போன பெண்ணின் பெற்றோர் காவல்துறையிடம் புகார் அளித்தும் தங்களை புகாரை கண்டுகொள்ளவில்லை என பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தனர். இந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்த நிலையில், ரச்சகோன்டா காவல்துறையினர் 6 மணிநேரத்தில் பெண்ணின் இடத்தை கண்டுபிடித்து மீட்டனர்.
மேலும், சம்பவத்திற்கு பின்னணியில் உள்ள முக்கிய குற்றவாளி நவீன் ரெட்டி உள்ளிட்ட 16 பேரை இதுவரை கைது செய்யப்பட்டுள்ளன. நவீன் ரெட்டிக்கும் பெண் வைஷாலிக்கும் சில மாதங்களாக பழக்கம் ஏற்பட்டு இருவரும் பரிசு பொருள்களை பகிர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் நவீன் அந்த பெண் வைஷாலிக்கு கார் ஒன்றை பரிசாக தந்துள்ளார். தொடர்ந்து நவீன் வைஷாலியை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதாகவும், ஆனால் வைஷாலி அதற்கு சம்மதிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இந்த பின்னணியில் தான் வைஷாலிக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிவான நிலையில், இந்த கடத்தல் செயலில் நவீன் இறங்கியதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.