பெற்ற மகளை தாயே கழுத்தை நெரித்து கொன்ற கொடூரம் ராஜஸ்தானில் அரங்கேறி இருக்கிறது. இதுதொடர்பாக கோட்டா அருகே உள்ள பரன் மாவட்டத்தைச் சேர்ந்த 38 வயதான ரேகா கன்வர் ஹடா என்ற பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பாக பேசியுள்ள மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் தருண் காந்த் சோமணி, “கைது செய்யப்பட்ட பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, அவரது மூத்த மகன் நிகேந்திர சிங்கின் இதயத்தில் பிரச்சனை இருக்கிறது. அது குணமாக வேண்டுமென்றால் நரபலி கொடுக்க வேண்டும் என கனவு வந்ததால் இப்படி செய்ததாக கூறியிருக்கிறார்” என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அந்த டவுனில் உள்ள ஷிவ் காலணியில் வசித்து வரும் ஆட்டோ ஓட்டுநரின் மனைவிதான் கைது செய்யப்பட்ட ரேகா. இவருக்கு உளவியல் ரீதியாக பிரச்சனை இருப்பதால் அதற்கான சிகிச்சையில் இருக்கிறார். இதனால் அடிக்கடி ரேகா தனது கணவரையும் கொல்ல துணிந்திருக்கிறார். இப்படிதான் சம்பவம் நடந்த நவம்பர் 5ஆம் தேதி கணவர் வெளியே சென்ற நேரம் பார்த்து வீட்டில் இருந்த 12 வயது மகள் சஞ்சனா மற்றும் 7 வயது மகன் சிங்ஹம் இருவரையும் ரேகா கொல்ல பார்த்திருக்கிறார்.
அப்போது மகன் சிங்ஹம் ஒருவழியாக தப்பிக்க, மகள் சஞ்சனா ரேகாவிடம் சிக்கியிருக்கிறார். அப்போது சஞ்சனாவின் கழுத்தை டவலால் நெரித்து கீழே தள்ளியிருக்கிறார் ரேகா. இதனைக் கண்ட சிங்ஹம் அலறியடித்துக் கொண்டு அக்கம்பக்கத்தினரை அழைத்துள்ளார். இதற்கிடையே, வீட்டை உள்பக்கமாக தாழிட்டு மகள் சஞ்சனாவின் கழுத்தை இன்னமும் இறுக்கியிருக்கிறார். இதனையடுத்து வந்த பக்கத்து வீட்டார் கதவை உடைத்துச் சென்று மூச்சுப்பேச்சின்றி கிடந்த சிறுமியை மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றுள்ளனர்.
அங்கு அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவிக்கவே, ரேகாவின் கணவர் கொடுத்த புகாரின் பேரில் அந்த பெண் கைது செய்யப்பட்டிருக்கிறார். ரேகா மீது 302 சட்டப்பிரிவின் கீழ் கொலை வழக்குப்பதிந்து நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தியிருக்கிறார்கள். அங்கு ரேகாவுக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டிருக்கிறது.