EMI மூலம் செல்போன் வாங்கியதை கணவன் மறைத்ததால், மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலம் மல்கங்கிரி மாவட்டத்தைச் சேர்ந்த கன்ஹேய் – ஜோதி மண்டல் தம்பதிக்கு சில ஆண்டுகளுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், மனைவிக்கு கணவர் கன்ஹேய் புதிதாக செல்போன் ஒன்றை பரிசாக கொடுக்க நினைத்துள்ளார். இதனால், மனைவிக்கு பிடித்த செல்போன் ஒன்றை வாங்கியுள்ளார். இதன் விலை அதிகமாக இருந்ததால், முழு பணத்தையும் கொடுத்து அவரால் வாங்க முடியவில்லை. இதனால் EMI-இல் அந்த செல்போனை வாங்கி மனைவிக்கு பரிசாகக் கொடுத்துள்ளார். ஆனால், EMI மூலம் செல்போன் வாங்கியதை அவர் மனைவியிடம் இருந்து மறைத்துவிட்டார். பிறகு மாதம் மாதம் EMI பணத்தை மனைவிக்குத் தெரியாமல் கட்டி வந்துள்ளார்.

இந்நிலையில், முழு பணத்தையும் கட்டியதை அடுத்து கணவர் கன்ஹேயிடம் நிதி நிறுவன அதிகாரிகள் கையெழுத்து வாங்குவதற்காக வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போதுதான் மனைவிக்குக் கணவன் பரிசாக கொடுத்த செல்போன் EMI மூலம் வாங்கியது என தெரியவந்தது. இதனால், ஜோதி மண்டல் மனமுடைந்து கணவனுடன் தகராறு செய்துள்ளார். பின்னர் கணவன் முன்பே விஷம் குடித்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் மனைவியை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஜோதி மண்டல், ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.