ஓணம் பண்டிகையை முன்னிட்டு நடந்த ஏலத்தில் ஒரு பூசணிக்காய் 47,000 ரூபாய்க்கு ஏலம் போனது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
கேரள மக்கள் ஓணம் பண்டிகையை வெகு விமர்சையாக கொண்டாடுவார்கள். கயிறு இழுத்தல், படகு போட்டி, பொது ஏலம் என்று பல்வேறு நிகழ்ச்சிகள் படுஜோராக நடைபெறும். இந்த போட்டிகளில் மக்களும் ஆர்வமுடன் கலந்து கொள்வார்கள். பொது ஏலத்தில் மக்கள் தாங்கள் வளர்க்கும் கால்நடைகள், தங்கள் விளைநிலங்களில் விளையும் காய்கறி, பழங்களை ஏலம் விடுவர். இந்த ஆண்டும், ஓணம் பண்டிகையை முன்னிட்டு இடுக்கியின் மலைப் பிரதேசத்தில் உள்ள புலம்பெயர்ந்த கிராமமான செம்மன்னாரில் கடந்த வெள்ளிக்கிழமை பொது ஏலம் நடைபெற்றது.
இந்த ஏல நிகழ்ச்சி ஆரம்பம் முதலே களைகட்டியது. மக்களும் ஆர்வத்துடன் தங்களது ஆடு, கோழி என பலவற்றை ஏலமிட்டனர். இதில், ஜார்ஜ் என்பவரின் நிலத்தில் விளைந்த பூசணிக்காய் ஏலத்திற்கு வந்தது. 5 கிலோ எடைக்கொண்ட இந்த பூசணிக்காயின் ஆரம்ப விலை ரூ. 5,000 என ஏலம் தொடங்கியது. ஏலம் போக போக இந்த பூசணிக்காயின் விலை உயர்ந்து கொண்டே போனது. இறுதியாக அந்த பகுதியைச் சேர்ந்த சிபி என்பவர் பூசணிக்காயை ரூ. 47,000-க்கு ஏலம் எடுத்தார். பூசணிக்காய் இவ்வளவு விலைக்கு ஏலம் சென்றது இதுவே முதல் முறை என மக்கள் ஆச்சரியத்தில் மூழ்கினர்.