பிரபல நடிகையை மொபைல் ஷோரும் ஊழியர்கள், கையை பிடித்து இழுத்து ஷோருமின் ஷட்டரை மூடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மலையாள படங்களில் கதாநாயகியாக நடித்து வரும் அன்னா ரேஷ்மா ராஜன், தனது அம்மாவின் செல்போனில் உள்ள சிம்கார்ட்டில் பிரச்சனை ஏற்பட்டதால், வேறு சிம் கார்டு வாங்குவதற்காக ஆலுவா பகுதியில் உள்ள நிறுவனத்தின் ஷோரூமுக்கு சென்றுள்ளார். மற்றவர்களுக்கு தெரியக்கூடாது என்பதற்காக மாஸ்க் அணிந்து, தலையை துப்பட்டாவால் மூடிக்கொண்டு அங்கு சென்றுள்ளார். ஆனால், அங்குள்ள 25 வயது பெண் மேலாளர் இவரிடம் முறையாக பதில் கூறாமல் இருந்துள்ளார்.

இதனால் அவர் குறித்து புகார் அளிக்க அவரை புகைப்படம் எடுத்துள்ளார். தன்னை குறித்து புகார் கொடுக்க புகைப்படம் எடுத்ததை உணர்ந்த அந்த பெண் மேலாளர் உடனடியாக அங்கிருந்த ஊழியர்களை அழைத்து நிறுவனத்தின் ஷட்டர்களை மூடுமாறு கூறியுள்ளார். ஊழியர்களும் ஷோரூமின் ஷட்டரை மூடி, ரேஷ்மா ராஜனின் கையை பிடித்து இழுத்து அங்கிருந்த சேரில் அமர வைத்துள்ளனர். இதில், ரேஷ்மா ராஜனுக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது, போலீசாரை தொடர்புகொள்ள முயன்ற ரேஷ்மா ராஜன், முடியாததால் தனது தந்தைக்கு நெருக்கமானவர்களிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, போலீசுக்கு தகவல் தெரிவித்த அவர்கள், உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர். போலீஸ் வந்த பின்னர் ஷோரூமின் ஷட்டர் திறக்கப்பட்டு ரேஷ்மா ராஜன் வெளியே அழைத்துவரப்பட்டார். இதுகுறித்து ஆலுவா காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த குறித்து பேசிய ரேஷ்மா ராஜன், உள்ளே மாட்டிக் கொண்ட வருத்தத்தில் அழுதுவிட்டதாக கூறினார். காவல் நிலையத்துக்கு வந்த ஷோரூம் ஊழியர்கள் அவரிடம் மன்னிப்புக் கேட்டனர். ஒருவரை வேலையைவிட்டு நீக்கவைப்பது எளிது. ஆனால், அவருக்கு வேலை வாங்கிக் கொடுப்பது கடினம் என்பதால், நான் அந்தப் பெண் மேலாளரை மன்னித்து விட்டுவிட்டேன் என்று அவர் கூறினார்.