ஆசிரியர் கொடூரமாக தாக்கியதால், சிறுவனின் தலையில் மூன்று நரம்புகள் வெடித்துச் சிதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள கௌதம் புத்தா நகரின் பாம்பாவாட்- மஹாவத் சாலையில் கேப்டன் சன்வாலியா பப்ளிக் பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில் சோரன் என்ற ஆசிரியர் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் எடுத்து வருகிறார். இந்நிலையில், தேர்வு நெருங்கிவருவதால் மாணவர்கள் நன்றாக படித்துவர வேண்டும் என்றும், மறுநாள் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டும் என்று மாணவர்களிடம் கூறியுள்ளார். அதன்படி அடுத்தநாள் 5ஆம் வகுப்பு மாணவர்களிடம் ஆசிரியர் கேள்வி கேட்டுள்ளார்.
![கேள்விக்கு பதிலளிக்காத மாணவன்..!! ஆத்திரத்தில் ஆசிரியர் அடித்ததால் வெடித்து சிதறிய நரம்பு..!!](https://1newsnation.com/wp-content/uploads/2022/09/index-1.jpg)
அப்போது, 12 வயது சிறுவன் ஒருவன் ஆசிரியரின் கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த ஆசிரியர் அந்த மாணவனை இரக்கமின்றி தலையிலும், முதுகிலும் சரமாரியாக அடித்துள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே அந்த சிறுவன் மயக்கமடைந்து விழுந்துள்ளான். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக மாணவர்கள் இதுகுறித்து மற்ற ஆசிரியர்களிடம் கூறியுள்ளனர். அவர்கள் அந்த சிறுவனை மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், அந்த சிறுவன் மேல் சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள நாயக் ஜெய் பிரகாஷ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
![கேள்விக்கு பதிலளிக்காத மாணவன்..!! ஆத்திரத்தில் ஆசிரியர் அடித்ததால் வெடித்து சிதறிய நரம்பு..!!](https://1newsnation.com/wp-content/uploads/2022/08/Death.jpg)
அங்கு சிறுவனை பரிசோதனை செய்ததில் ஆசிரியர் தாக்கியதில் சிறுவனின் தலையில் மூன்று நரம்புகள் வெடித்துச் சிதறியது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தான். இந்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.