இருசக்கர வாகனத்தை தொட்டதற்காக பட்டியலின மாணவனை ஆசிரியர் ஒருவர் அடித்து துன்புறுத்தியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் பட்டியலின மாணவன் 6ஆம் வகுப்பு படித்து வந்துள்ளான். அந்த மாணவன் கடந்த வெள்ளிக்கிழமை பள்ளி முடிந்தும் வீட்டிற்கு தாமதமாக வந்திருக்கிறார். அந்த மாணவனின் தாய் அவனிடம், `ஏன் பள்ளி சீக்கிரமாக முடிந்தும் இவ்வளவு தாமதமாக வருகிறாய்?’ என கேட்டுள்ளார். அப்போது இந்த சிறுவன், பள்ளியில் நடந்தது குறித்து தனது தாயிடம் விரிவாக கூறியிருக்கிறார். பள்ளியில் இடைவேளையின் போது ஒரு ஆசிரியரின் இருசக்கர வாகனத்தை தொட்டதற்காக அவர் தன்னை அடித்து துன்புறுத்தியதாக தெரிவித்திருக்கிறார்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த தாய், காவல்நிலையத்தில் புகார் அளித்தார். மேலும், ஆசிரியர் தனது மகனை தனியாக அறையில் அடைத்து வைத்ததாக தாய் குற்றம்சாட்டியுள்ளார். இந்த சம்பவத்தை அடுத்து, அந்த ஆசிரியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதுவரை கைது செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இந்தியாவில், அதுவும் பள்ளிகளில் இது மாதிரி தொடர்ச்சியாக தீண்டாமை சார்ந்த கொடுமைகள் நடந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.