பீகார் மாநிலம், மேற்கு சம்பரனில் ஒரு புலி கடந்த 6 மாதத்தில் 10 பேரை கடித்துள்ளது, அதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர், ஒருவர் மட்டும் ஆபத்தான நிலையில் உள்ளார். மனிதர்களை கொள்ளும் புலியால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர், வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் பயத்தில் தவித்து வந்தனர்.
கடந்த வெள்ளிக்கிழமை காலை கோபர்தானா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டும்ரி என்ற இடத்தில் 35 வயதான சஞ்சய் மஹதோ என்பவர் புலியால் பலியாகினார். அதே நேரத்தில் வால்மீகி புலிகள் சரணாலயத்தின் பலுவா கிராமத்தில் 35 வயது பெண் மற்றும் அவரது 10 வயதுடைய மகன் இருவரும் வனத்துறையின் உத்தரவை மீறி புல் வெட்ட வயலுக்குச் சென்றுள்ளனர், அங்கு இருவரும் அந்த புலியால் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும் வீட்டில் தூங்கி கொண்டிருந்த 12 வயது சிறுமியையும் புலி கொன்றுள்ளது. இதனால் அந்த புலியை கொல்ல தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் (NTCA) அனுமதி வழங்கியுள்ளது. வனத்துறையினர் கடந்த 25 நாட்களாக பகாஹா வனப்பகுதியில் புலியை தேடி வந்தனர். புலி வெவ்வேறு இடங்களுக்கு சென்றதால் பிடிப்பதில் தாமதம் ஆனது.
ஆனால் புலியின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகமா ஆனதால் மக்களின் கோபம் அதிகரித்தது. வனத்துறை அலுவலகம் மீதும் மக்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். அரசு வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டன. இதுமட்டுமின்றி, அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த போலீசாரையும் அடித்து உதைத்தனர். வனத்துறையினர் புலியை பிடிக்க வேண்டும் அல்லது கொல்ல வேண்டும், இல்லையெனில் புலியை கொல்ல அனுமதிக்க வேண்டும் என கோரிக்கையம் விடுத்தனர். இறுதியில் பீகார் மாநிலம், மேற்கு சம்பரனில், இன்று மதியம் அந்த புலியை வனத்துறையினர் கொன்றுள்ளனர்.