சம்பளம் கேட்ட கார் ஓட்டுனரை டிராவல்ஸ் நிறுவன பெண் ஊழியர்கள் கடுமையாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் சுவாமி விவேகானந்தர் சர்வதேச விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த பகுதியில் ராகுல் என்ற தனியார் டிராவல்சில் கார் டிரைவராக பணியாற்றி வருபவர் தினேஷ். இவருக்கு மே மற்றும் ஜூன் மாதத்திற்கான சம்பளப் பணம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், ராய்ப்பூர் விமான நிலையம் அருகே அமைந்துள்ள அந்த டிராவல்ஸ் நிறுவனத்திற்கு சென்ற தினேஷ், அங்கு பணியில் இருந்த பெண் ஊழியர்களிடம் தனக்கான சம்பள பாக்கியை தருமாறு கேட்டுள்ளார். ஆனால், பெண் ஊழியர்கள் தகாத வார்த்தைகள் கூறி தினேஷிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த தினேஷ், நிறுவனத்தின் மேலாளர் செல்போன் எண்ணை தரும்படி பெண் ஊழியர்களிடம் கேட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த பெண் ஊழியர்கள் தினேஷை சரமாரியாக தாக்கியுள்ளனர். விமான நிலையத்திற்கு வெளியே இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. ஐந்துக்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் ஒன்று சேர்ந்து தினேஷை கடுமையாக தாக்கியுள்ளனர். தினேஷின் சட்டையை கிழித்து மானபங்கப்படுத்தியதுடன் அவரை செருப்பு மற்றும் பெல்ட்டால் கடுமையாக தாக்கினர். பெண் ஊழியர்கள் தாக்குவதை அருகில் இருந்தவர்கள் வேடிக்கை பார்த்ததுடன் தங்கள் செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளனர்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. தன் மீது தாக்குதல் நடத்திய பெண் ஊழியர்கள் மீது தினேஷ் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.