50 மாணவிகளின் மத்தியில் தேர்வு எழுத அமரவைக்கப்பட்ட பிளஸ் 2 மாணவன் மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.
பீகார் மாநிலத்தை சேர்ந்த மணி சங்கர் என்ற இளைஞர் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நாளந்தா அருகே பிரில்லியண்ட் ஸ்கூல் என்னும் பள்ளியில் இண்டர் மீடியட் தேர்வு எழுத சென்றுள்ளார். அங்கு அதிகளவிலான மாணவிகள் தேர்வு எழுத வந்திருந்த நிலையில், மாணவர்களில் ஒருசிலர் மட்டுமே வந்திருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மணி சங்கர், 50 மாணவிகள் மத்தியில் தேர்வு எழுத அமர வைக்கப்பட்டுள்ளார். அருகில் ஒரு மாணவர் கூட இல்லையே என உணர்ந்து, மணி சங்கர் பதற்றம் அடைய தொடங்கியுள்ளார்.
இதனால் அவருக்கு வியர்வை கொட்டி திடீரென மயங்கி கீழே விழுந்தார். அதைத் தொடர்ந்து அவருக்கு பயங்கர காய்ச்சல் ஏற்பட்டதால், மாணவர் மணி சங்கர் அங்குள்ள சதார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் நலமாக உள்ளதாக கூறப்படுகிறது. பதற்றம் காரணமாக ஏற்பட்ட மயக்கம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 50 மாணவிகளுக்கு நடுவில் தேர்வு எழுத அமரவைக்கப்பட்ட பிளஸ் 2 மாணவர், பயத்தால் மயங்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பேசு பொருளாக மாறியுள்ளது.