பெங்களூருவில் ஒரு நிமிடத்தில் தானாக சட்னி , சாம்பாருடன் இட்லி வழங்கும் ஏ.டி.எம். அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பெங்களூரு தொழிலதிபர்கள் ஷரன் ஹிரேமத் , சுரேஷ் சந்திரசேகரன் ஆகியோர் ஸ்டார்ட் அப நிறுவனம் ஒன்றை தொடங்கினர். இவர்கள் இந்த இயந்திரத்தை வடிவமைத்து அசத்தி உள்ளார்கள். ஏ.டி.எம். எப்படி கார்டு போட்டால் பணம் வருமோ அதே போல பணம் போட்டால் இது சுட சுட இல்லி தருகின்றது.
இந்தியாவில் பெரும்பாலான நகரங்களில் காலை உணவு இட்லிதான். இதைத் தவிர நம் உடலுக்கு ஏற்ற உணவு வேறு இல்லை என கூறலாம். மென்மையான பஞ்சு போல இட்லி இருந்தால் எந்த இடத்திலும் தவிர்க்க முடிவதில்லை.
சைவ வகைகளில் காலை உணவு இரவு உணவு என்று அமர்ந்தால் போதும் முதலில் இலையில் வருவது இட்லிதான் பிறகு தான் எல்லாம். இட்லியுடன் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, சாம்பார் என்ற இணைப்பின் ருசி கண்டிப்பாக நம்மால் மறுக்க முடியாது. உடல்நலக் குறைவு ஏற்பட்டால் மருத்துவர்கள் பரிந்துரையும் இட்லி தான். இப்படி இட்லியின் முக்கியத்துவத்தை அடுக்கிக் கொண்டே போகலாம்.
மாவை அறைத்து அதை இட்லி கொப்பரையில் ஊற்றி வேகும் வரை காத்திருந்து பின் எடுத்த காலம் எல்லாம் மலை ஏற போகிறது. தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ஒவ்வொரு விஷயத்திலும் நம்மை பல கட்டம் முன்னோக்கி அழைத்து செல்கிறது. சாலை ஓரத்தில் இருக்கும் பாட்டி இட்லி கடைகள் எப்படி காலப்போக்கில் மறைந்து வருகிறதோ, அதேபோல் இட்லி அவிக்கும் காலமும் மலை ஏற இருக்கிறது. ஆம், அழகாக சூடாக இட்லி வழங்கும் ஏடிஎம் மெஷின் பயனர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது.
இது 24X7 இயந்திரம் ஆகும். இந்த இயந்திரத்தின் மூலம் 12 நிமிடங்களில் 72 இட்லிகளை வழங்க முடியும் என எகனாமிக் டைம்ஸ் தளம் தெரிவித்திருக்கிறது. இந்த இயந்திரம் இட்லிக்கான பொடி மற்றும் சட்னியையும் வழங்குவதாக என கூறப்படுகிறது
ட்விட்டரில் இதுகுறித்த வீடியோ வெளியாகி இருக்கிறது. வீடியோவில் உள்ள காட்சிகளை விரிவாக பார்க்கையில், மெனுவை பெற க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்ய வேண்டும். பின் இதில் காட்டப்படும் உணவுகளை ஆர்டர் செய்து அப்படியே பணம் செலுத்தலாம்..
ஏடிஎம் இயந்திரத்தில் இட்லிகள் புதிதாக அவிக்கப்பட்டு சுமார் 55 வினாடிகளில் பேக் செய்து இயந்திரத்துக்கு வெளியில் அனுப்பப்படுகிறது. உடன் சட்னியும், பொடியும் இடம்பெறுகிறது. இதை பயனர்கள் பெற்றுக் கொள்ளலாம். வீடியோவில் காட்டப்படும் மெனுவில் உளுந்தவடையும் காட்டப்படுகிறது.
பெங்களூரில் இந்த தானியங்கி இயந்திரம் இரண்டு இடங்களில் நிறுவப்பட்டுள்ளது. வரும் காலங்களில் இதை பிற முக்கிய இடங்களிலும் விரிவுப்படுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இட்லியில் தொடங்கிய இந்த இயந்திரம் வரும் காலங்களில் தோசை, ரைஸ் மற்றும் ஜூஸ் என அனைத்துக்கும் ஆரம்பிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது