பதவியில் நீடிப்பதற்கான சட்டப்பூர்வ உரிமைக்கான காரணத்தைக் காட்டுமாறு 9 பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்களுக்கும் ஆளுநர் நோட்டீஸ் அனுப்பினார்.
கேரள உயர் நீதிமன்றம், வேந்தர் என்ற முறையில் ஆளுநர் இறுதி முடிவு எடுக்கும் வரை, மாநிலத்தில் உள்ள ஒன்பது பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை பதவியில் தொடர அனுமதி அளித்துள்ளது.
பல்கலைக்கழங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை என்று உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு வழங்கியது. இந்த உத்தரவை மேற்கோள்காட்டி, கேரளத்தில் மாநில அரசால் நியமிக்கப்பட்ட 9 பல்கலைக் கழக துணைவேந்தர்களையும் அக். 24 ஆம் தேதிக்குள் பதவி விலகுமாறு அம்மாநில ஆளுநர் ஆரிஃப் கான் ஆளுநர் உத்தரவிட்டிருந்தார்.
பதவியில் நீடிப்பதற்கான சட்டப்பூர்வ உரிமைக்கான காரணத்தைக் காட்டுமாறு 9 பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்களுக்கும் ஆளுநர் நோட்டீஸ் அனுப்பினார். நவம்பர் 3-ம் தேதிக்குள் பதிலளிக்க கேட்கப்பட்டிருந்தனர்.
உத்தரவை எதிர்த்து துணைவேந்தர்கள் கேரளா உயர் நீதிமன்றத்தை நாடினர். உயர் நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு, திங்கள் கிழமை மாலை இந்த மனுவினை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. அப்போது இயற்கை நீதி மறுக்கப்படுவதாக மனுதாரர்கள் வாதிட்டனர்.
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆளுநர் இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரை 9 பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்கள், பதவியில் நீடிக்கலாம் என உத்தரவிட்டது. அனைத்து துணைவேந்தர்களுக்கும், ஆளுநர் நோட்டீஸ் அனுப்பியதால், அவர்களை ராஜினாமா செய்யுமாறு கோரிய முந்தைய கடிதத்தின் பொருத்தம் இல்லாமல் போய்விட்டது என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.
ஆளுநர் அலுவலகம் அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக அல்ல என்றார் விஜயன். ஆரிஃப்கான், ஆளுநர் அலுவலகத்தை தவறாக பயன்படுத்துகிறார். இது அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தின் சாரத்திற்கு எதிரானது.
ஏபிஜே அப்துல் கலாம் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தைத் தவிர, கேரளப் பல்கலைக்கழகம், மகாத்மா காந்தி பல்கலைக்கழகம், கொச்சின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், கேரள மீன்வளம் மற்றும் கடல்சார் ஆய்வுகள் பல்கலைக்கழகம், கண்ணூர் பல்கலைக்கழகம், ஸ்ரீ சங்கராச்சார்யா சமஸ்கிருதப் பல்கலைக்கழகம், கோழிக்கோடு பல்கலைக்கழகம் மற்றும் துஞ்சத் எழுத்தச்சன் மலையாளப் பல்கலைக்கழகம் ஆகிய 8 துணை வேந்தர்களையும் ராஜினாமா செய்ய வேண்டும் என ஆளுநர் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.