சமூக வலைதளத்தில் அன்றாடம் பல விடியோக்கள் வைரலாகி வருகிறது. இதில் சில விடியோக்கள் வியப்படையும் வகையில் இருக்கும், அப்படி ஒரு வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் காகம் மனிதர்களை போல் பேசுவது பலரையும் வியப்படைய வைத்துள்ளது.
பொதுவாக மனிதர்கள் பறவை, நாய் போன்றவைகளை செல்லப்பிராணிகளாக வளர்ப்பார்கள். சில வருடங்களுக்கு முன் பலரும் வீட்டில் பச்சைக்கிளிகளை வளர்த்து வந்தனர். அந்த பச்சைக்கிளிக்கு பேச பயிற்சி கொடுத்து மனிதர்களைப் போன்று கிளிகளை பேச வைத்தனர். முந்தைய காலத்தில் பச்சைக்கிளிகள் பேசுவதை நாம் பார்த்திருப்போம்.
1972 ஆம் ஆண்டு வன உயிரினப் பாதுகாப்பு சட்டத்தின் படி, பச்சைக்கிளி, நீல பைங்கிளி, பஞ்ச வர்ண புறா, வண்ணச்சிட்டு, மைனா, கவுதாரி, பனங் காடை உள்ளிட்ட சில வன உயிரினங்களை வீட்டில் வளர்ப்பது சட்டவிரோதமாகும். இந்த சட்டம், இயற்கைச் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில், அந்தந்த உயிரினங்களை அவற்றின் இயற்கையான வாழிடங்களில் பாதுகாக்கும் விதமாக இயற்றப்பட்டது. இதனையடுத்து பேசும் பச்சைக்கிளிகளை பார்ப்பது அரிதாகிவிட்டது.
இந்நிலையில் மகாராஷ்ட்ராவில் காகம் ஒன்று மனிதர்கள் போன்று பேசுவது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தின் வால்கர் பகுதியில், வழிதவறி வந்த காகத்தை ஒரு குடும்பம் காப்பாற்றி, அதனை பராமரித்து வந்துள்ளது. காலப்போக்கில், அந்தக் காகம் குடும்பத்தின் ஒரு உறுப்பினராக மாறியது மட்டுமல்லாது, அவர்கள் பேச்சு முறையைப் பின்பற்றத் தொடங்கி, மனிதர்களை போல் பேசி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த அபூர்வ நிகழ்வை வீடியோவாக பதிவு செய்த அவர்கள், அதை இணையத்தில் பகிர்ந்தனர். காகம் பேசும் வீடியோ பலரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.