நீங்கள் அடிக்கடி நெடுஞ்சாலையில் பயணிப்பவராக இருந்தால் உங்களுக்கு ஒரு முக்கியமான செய்தி உள்ளது. சமீபத்தில் சுங்கக் கட்டணம் தொடர்பான ஒரு செய்தி வேகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது. அதில், குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் அரசாங்கத்திடமிருந்து வரி விலக்கு கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது, அவர்கள் சுங்கச் சாவடிகளைக் கடந்து செல்லும்போது சுங்கவரி செலுத்த வேண்டியதில்லை என்று கூறப்படுகிறது. இது உண்மைதானா என்று நிறையப் பேருக்கு சந்தேகம் உள்ளது. அதுகுறித்து PIB உண்மை கண்டறியும் சோதனையில் அந்தச் செய்தி உண்மையா இல்லையா என்பது தெரியவந்துள்ளது.
சுங்கக் கட்டணம் தொடர்பான அந்த செய்தியில், இந்தியாவில் உள்ள அனைத்து சுங்கச் சாவடிகளிலும் பத்திரிகையாளர்களுக்கு டோல் வரியில் விலக்கு கிடைக்கும் என்றும், அதற்கு அடையாள அட்டையைக் காட்ட வேண்டியது அவசியம் என்றும் கூறப்பட்டுள்ளது. இது வாட்ஸ் அப்பில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது. PIB உண்மைச் சரிபார்ப்புக்குப் பிறகு இந்தச் செய்தி முற்றிலும் போலியானது என்று கண்டறியப்பட்டுள்ளது. உண்மையில் அரசிடமிருந்து அத்தகைய உத்தரவு எதுவும் வழங்கப்படவில்லை.
உண்மையில் சுங்கச் சாவடிகளில் யாருக்கெல்லாம் சுங்கக் கட்டணம் இலவசம் என்ற பட்டியலை PIB வெளியிட்டுள்ளது. அதைப் பற்றி தெரிந்துகொள்ள https://morth.nic.in/sites/default/files/faqs_exemptions.pdf இந்த லிங்க்கை கிளிக் செய்து பார்க்கலாம்.
சமூகவலைத்தளங்களில் பல நேரங்களில் இதுபோன்ற தவறான செய்திகள் வைரலாகி வருகின்றன. இதுபோல வாட்ஸ்அப்பில் வரும் செய்திகள் குறித்து உங்களுக்கு சந்தேகம் இருந்தால், நீங்கள் PIB மூலம் உண்மையைச் சரிபார்க்கலாம். இதற்கு https://factcheck.pib.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணைப்பில் செல்ல வேண்டும். இது தவிர, 8799711259 என்ற வாட்ஸ்அப் எண்ணிலோ அல்லது pibfactcheck@gmail.com என்ற மின்னஞ்சலிலோ தகவல்களை அனுப்பலாம்.