ஆண்களுக்கு ஒரு ராத்திரி சிவராத்திரி, பெண்களுக்கு ஒன்பது ராத்திரி நவராத்திரி என்று பழமொழி சொல்லப்படுவதுண்டு. அந்த அளவுக்குப் பெண் சக்தியைப் போற்றும் மிக முக்கியமான பண்டிகையாக நவராத்திரி விளங்குகிறது. ஆடி மாதத்தில் அம்பிகையை வழிபட தவறியவர்கள், நவராத்திரி காலத்தில் குங்கும அர்ச்சனை, விளக்கு பூஜை போன்ற வழிபாடுகளைச் செய்து அம்பிகையின் அருளைப் பெறலாம்.
ஒரு வருடத்தில் நான்கு நவராத்திரிகள் கொண்டாடப்படுகின்றன. அவை, ஆஷாட நவராத்திரி, சாகம்பரி நவராத்திரி, சைத்ர நவராத்திரி மற்றும் புரட்டாசி மாதத்தில் வரும் சாரதா நவராத்திரி. இவற்றில், புரட்டாசி மாதத்தில் வரும் சாரதா நவராத்திரிதான் இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அன்னை பராசக்தி, அசுரர்களை வதம் செய்து வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக இந்த விழா அமைந்துள்ளது.
புரட்டாசி மாத அமாவாசையான மகாளய அமாவாசைக்கு அடுத்த நாள் வரும் பிரதமை திதி தொடங்கி, அஷ்டமி வரையில் ஒன்பது நாட்களும் நவராத்திரி என்றும், பத்தாவது நாள் விஜயதசமி என்றும் கொண்டாடப்படுகிறது. இந்த 9 நாட்களில், முதல் மூன்று நாட்கள் துர்கா தேவியையும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி தேவியையும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியையும் வழிபடுகிறோம். ஒவ்வொரு நாளும் அம்பிகையின் ஒன்பது விதமான சக்திகள் போற்றித் துதிக்கப்படுகின்றன.
அந்த வகையில், இந்தாண்டு நவராத்திரி விழா வரும் செப்டம்பர் 22-ஆம் தேதி தொடங்குகிறது. இந்த நாளில், வீடுகளில் கலசம் வைத்து, கொலு படிகளை அமைத்து வழிபாடுகளைத் தொடங்குவது வழக்கம். கலசம் அமைப்பதற்கு உகந்த நேரம் குறித்து ஜோதிடர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.
செப்டம்பர் 22 அன்று காலை 6.09 முதல் 8.06 மணி வரை கலசம் அமைப்பதற்கான சிறந்த நேரமாக உள்ளது. மேலும், அன்றைய தினம் காலை 11.49 முதல் பகல் 12.38 மணி வரை அபிஜித் முகூர்த்தம் அமைந்துள்ளது. இந்த நேரங்களில் கலசம் அமைத்து, அம்பிகையை அதில் எழுந்தருளச் செய்து வழிபடுவது மிகவும் சிறப்பானது. கொலு வைப்பதற்கும் இதுவே மிகவும் உகந்த நேரம்.
செப்டம்பர் 28: மகா சஷ்டி
செப்டம்பர் 29: மகா சப்தமி
செப்டம்பர் 30: மகா அஷ்டமி
அக்டோபர் 1: சரஸ்வதி பூஜை (மகா நவமி)
அக்டோபர் 2: விஜயதசமி
நவராத்திரி காலத்தில், அம்பிகையின் அருளைப் பெற தினமும் காலை, மாலை என இருவேளையும் தீபம் ஏற்றி வழிபடுவது வழக்கம். இந்த ஒன்பது நாட்களும் அம்பிகையின் ஒன்பது விதமான சக்திகளைப் போற்றி துதித்து, அவளின் அருளைப் பெறுவோம்.
Read More : வீட்ல எங்க பார்த்தாலும் சிலந்தியும், ஒட்டடையுமா இருக்கா?. கவலைப்படாம இதை செய்யுங்க, எந்த பூச்சியும் வராது!