NCERT 8 ஆம் வகுப்பு புத்தகத்தில் மிகப்பெரிய மாற்றங்களை செய்துள்ளது.
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தை திருத்தியுள்ளது. அதில் டெல்லி சுல்தான் மற்றும் முகலாயர் காலத்தில் “மத சகிப்பின்மை” இருந்ததாக கூறியுள்ளது. சுல்தான் மற்றும் முகலாயர் காலம் குறித்து இந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக” பாபர், நகரங்களின் முழு மக்களையும் படுகொலை செய்த மிருகத்தனமான மற்றும் இரக்கமற்ற வெற்றியாளர்” என்றும், அக்பரின் ஆட்சி கொடுமையான ஆட்சி என்றும், கோயில்கள் மற்றும் குருத்வாராக்களை அழித்த ஔரங்கசீப் என்றும் விவரித்துள்ளது. இதனால் புதிய சர்ச்சை கிளம்பி உள்ளது.
“வரலாற்றில் சில இருண்ட காலங்கள் பற்றிய குறிப்பில் கடந்த கால நிகழ்வுகளுக்கு இன்று யாரும் பொறுப்பேற்கக்கூடாது” என்ற திருத்தங்களுடன் ஒரு மறுப்பு அறிக்கையை NCERT சேர்த்துள்ளது..
டெல்லி சுல்தான்கள் மற்றும் முகலாயர்கள் பற்றி NCERT புத்தகம் என்ன சொல்கிறது?
NCERT 8 ஆம் வகுப்புக்கான சமூக அறிவியல் புத்தகத்தின் பகுதி 1 ஐ வெளியிட்டது, ‘சமூகத்தை ஆராய்தல்: இந்தியன் மற்றும் அப்பால்’ (Exploring Society: Indian and Beyond)’.. இந்தப் புத்தகம் நடப்பு ஆண்டிலேயே பயன்படுத்தப்பட உள்ளது.
13 ஆம் நூற்றாண்டுக்கும் 18 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலம் முந்தைய ஆண்டுகளில் 7 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டிருந்தாலும், டெல்லி சுல்தான், முகலாயர்கள் மற்றும் மராத்தியர்களை உள்ளடக்கிய இந்திய வரலாற்றின் காலம் இப்போது புதிய பாடத்திட்டத்தில் 8 ஆம் வகுப்பில் மட்டுமே கையாளப்படும் என்று NCERT தெரிவித்துள்ளது.
‘இந்தியாவின் அரசியல் வரைபடத்தை மறுவடிவமைத்தல்’ என்ற புத்தகத்தின் அத்தியாயங்கள், 13 ஆம் நூற்றாண்டு முதல் 17 ஆம் நூற்றாண்டு வரையிலான இந்திய வரலாற்றை உள்ளடக்கியது. அவற்றில் டெல்லி சுல்தான்களின் எழுச்சி மற்றும் வீழ்ச்சி மற்றும் அதற்கு எதிரான எதிர்ப்பு, விஜயநகரப் பேரரசு, முகலாயர்கள் மற்றும் அவர்களுக்கு எதிரான எதிர்ப்பு மற்றும் சீக்கியர்களின் எழுச்சி ஆகியவை அடங்கும்.
சுல்தான்களின் காலத்தை அரசியல் ஸ்திரமின்மை இல்லாத காலம் என்று இந்த புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. மேலும் சுல்தான்களின் ஆட்சிக்காலத்தில் கிராமங்கள் மற்றும் நகரங்கள் சூறையாடப்பட்டன, கோயில்கள் மற்றும் கல்வி மையங்கள் அழிக்கப்பட்டன. சுல்தானகம் மற்றும் முகலாயர்கள் பற்றிய பிரிவுகளில் கோயில்கள் மீதான “தாக்குதல்கள்” மற்றும் சில ஆட்சியாளர்களின் “கொடூரத்தனம்” பற்றிய பல குறிப்புகள் உள்ளன.
NCERT இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘வரலாற்றில் சில இருண்ட காலங்கள் பற்றிய குறிப்பு’ தவிர, கடந்த கால நிகழ்வுகளுக்கு இன்று யாரும் பொறுப்பேற்கக்கூடாது என்பதை தெளிவுபடுத்தும் வகையில் அத்தியாயங்களில் ஒன்றில் ஒரு எச்சரிக்கைக் குறிப்பு சேர்க்கப்பட்டுள்ளது. மேலும்” சிறந்த எதிர்காலத்திற்கான முக்கியமான பாடங்களைக் கற்றுக்கொள்ளும் நோக்கில் வரலாற்றை நேர்மையாக அணுகுவதில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020 மற்றும் பள்ளிக் கல்விக்கான தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு 2023 ஆகியவற்றின் படி NCERT புதிய பள்ளி பாடப்புத்தகங்களை வெளியிட்டு வருகிறது. இதுவரை, 1 முதல் 4 ஆம் வகுப்புகள் மற்றும் 6 மற்றும் 7 ஆம் வகுப்புகளுக்கான புதிய புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன; 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.