தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கூட்டணி கணக்குகளும், கட்சி தாவல்களும் உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ளன. இந்த நிலையில், அதிமுக-வின் முன்னாள் மாவட்ட செயலாளரும், சமீபத்தில் தன்னை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக் கொண்டவருமான கவிதா ராஜேந்திரன் கொடுத்துள்ள பேட்டி பரபரப்பை கிளப்பியுள்ளது.
அரியலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் விரைவில் தவெக-வில் இணையப்போவதாக தெரிவித்துள்ளார். தற்போது ஓபிஎஸ் ஒரு நிலையற்ற அரசியல் சூழலில் தவித்து வருவதாக குறிப்பிட்ட அவர், நடிகர் விஜய்யின் தலைமையிலான தவெக-வில் ஓபிஎஸ் இணைவது உறுதி என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார். இதற்கான ஆரம்பகட்டப் பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே முடிந்துவிட்டதாகவும், தவெக தலைவர் விஜய், ஓபிஎஸ்-ஐ முறைப்படி கட்சிக்கு அழைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக, கடந்த ஜனவரி 1-ஆம் தேதியே ஓபிஎஸ் அவர்கள் தவெக-வில் இணைந்திருக்க வேண்டியது என்றும், சில தவிர்க்க முடியாத அரசியல் நிர்பந்தங்கள் மற்றும் சட்ட சிக்கல்கள் காரணமாகவே அந்த முடிவு தள்ளிப்போயுள்ளதாகவும் கவிதா ராஜேந்திரன் கூறியுள்ளார். அந்த தடைகள் நீங்கியவுடன் ஓபிஎஸ்-ஸின் அடுத்தகட்ட அரசியல் பயணம் பனையூரை நோக்கியே இருக்கும் என்றும் அவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



