சென்னை மாநகராட்சியின் 5,6 மண்டலங்களில் தனியார் நிறுவனத்தின் வாயிலாக திடக்கழிவு மேலாண்மை மேற்கொள்ளப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் தற்காலிக தூய்மை பணியாளர்கள் ரிப்பன் பில்டிங் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. கடந்த 1-ம் தேதி இந்த போராட்டம் தொடங்கிய நிலையில், 13 நாட்களாக போராட்டம் தொடர்ந்து வருகிறது.. இந்த போராட்டத்திற்கு அதிமுக, காங்கிரஸ், நாம் தமிழர், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.. மேலும் சினிமா பிரபலங்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்..
ஆனால் தனியார் நிறுவன பணியில், பணி பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் இருப்பதாகவும், தூய்மை பணியாளர்கள் உடனடியாக போராட்டத்தை கைவிட வேண்டும் எனவும் சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்தது..
இந்த நிலையில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தால் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக கூறி தேன்மொழி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, சென்னை ரிப்பன் பில்டிங் முன்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.. போராட்டம் நடத்தி வரும் தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்த வேண்டும்.. சட்டத்திற்கு உட்பட்டு அனைவரையும் அப்புறப்படுத்துங்கள்.. அனுமதிக்கப்படாத இடத்தில் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது.” என்று நீதிபதி உத்தரவிட்டார்..
இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர் பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.. ஆனால் இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.. போராட்டம் தொடரும் என்று தூய்மை பணியாளர்கள் அறிவித்துள்ளனர்.. மேலும் “ பேச்சுவார்த்தைக்கு அழைத்ததை ஒட்டி, அமைச்சர்கள், மேயரை சந்திந்து பேசினோம்.. ஆனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது..
எங்கள் போராட்டம் தொடரும்.. இனி முதல்வர் தலைமையில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் தான் பங்கேற்போம்.. நாங்கள் தொடர்ந்து போராடுவோம்.. முடிந்தால் எங்களை அப்புறப்படுத்துங்கள்.. கோரிக்கை பற்றி பேச முடியாது என ஆணவத் திமிரில் அரசு இருந்தால் அதற்கான பதிலை நாங்கள் தருவோம்..” என்று தூய்மை பணியாளர்கள் எச்சரித்துள்ளனர்..