பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் மற்றும் எக்ஸ் உள்ளிட்ட 26 முக்கிய தளங்களை முடக்க அரசாங்கம் எடுத்த நடவடிக்கை, நேபாளில் இளம் தலைமுறை இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.. இதனால் நேற்று நாடு தழுவிய போராட்டங்கள் நடந்த நிலையில் அவை வன்முறையாக மாறியது.. இதன் விளைவாக குறைந்தது 19 பேர் இறந்தனர் மற்றும் 250 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர், இது சமீபத்திய ஆண்டுகளில் நாடு கண்ட மிகக் கொடிய போராட்டமாக அமைந்தது.. இதையடுத்து நேபாள அரசு நேற்று இரவே சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியது..
ஆனால் நேபாளத்தில் உள்ள ஊழல் அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்று கோரி போராட்டக்காரர்கள் இன்றும் போராட்டத்தை தொடர்ந்தனர்.. நேபாளத்தில் நாடாளுமன்ற கட்டிடத்திற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்ததால் உச்சக்கட்ட பரபரப்பு நிலவியது.. அந்நாட்டில் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் ராணுவ பாதுகாப்பையும் மீறி, நாடாளுமன்றத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.. இதையடுத்து நாடாளுமன்றம் முழுவதும் கரும்புகை சூழ்ந்தது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு நாட்டின் முக்கிய நிர்வாக வளாகமான சிங்கா தர்பார் மீது தாக்குதல் நடத்தினர்… ஊழல் மற்றும் கடுமையான நிர்வாகத்திற்காக பிரதமர் பதவி விலகக் கோரி போராட்டம் தொடர்ந்த நிலையில், பிரதமர் கே.பி. சர்மா ஒலி இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் நேபாளத்தில் ஆட்சி கவிழ்ந்துள்ளது.. மேலும் அங்கு அசாதாரண சூழல் நிலவுகிறது..
இந்த நிலையில் இந்திய வெளியுறவு அமைச்சகம் (MEA), இன்று ‘நேபாளத்திற்கான ஆலோசனை’ என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதில் நாட்டிலுள்ள இந்திய குடிமக்கள் என்ன செய்ய முடியும், அவர்கள் அணுகக்கூடிய உதவி எண்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
நேபாளத்தில் தற்போது நடைபெற்று வரும் போராட்டங்கள் காரணமாக, இந்தியர்கள் நேபாளத்திற்கு பயணம் செய்வதை ஒத்திவைக்குமாறு அறிவுறுத்தப்படுள்ளது.. .
“நேபாளத்தில் வளர்ந்து வரும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, நிலைமை சீராகும் வரை இந்திய குடிமக்கள் அங்கு பயணத்தை ஒத்திவைக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.. தற்போது நேபாளத்தில் உள்ள இந்திய குடிமக்கள் தங்கள் தற்போதைய வசிப்பிடங்களில் தங்கியிருக்கவும், தெருக்களில் செல்வதைத் தவிர்க்கவும், அனைத்து எச்சரிக்கையையும் கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்..
நேபாள அதிகாரிகள் மற்றும் காத்மாண்டுவில் உள்ள இந்திய தூதரகத்தின் உள்ளூர் பாதுகாப்பு ஆலோசனைகளைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..
இதனிடையே நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகம் உதவி எண்களை அறிவித்துள்ளது.. தனது எக்ஸ் பக்க பதிவில் “ நேபாளத்தில் உள்ள இந்தியர்கள் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் அல்லது அவசரகால சூழ்நிலையை எதிர்கொண்டால் பின்வரும் எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என்று தூதரகம் தெரிவித்துள்ளது.
“நேபாளத்தில் உள்ள அனைத்து இந்திய குடிமக்களும் ஏதேனும் அவசரகால சூழ்நிலையை எதிர்கொண்டால் அல்லது உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்ள காத்மாண்டுவில் உள்ள இந்திய தூதரகத்தின் பின்வரும் தொலைபேசி எண்களைக் குறிப்பிடுமாறு இதன்மூலம் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று அது கூறியது.
நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகத்திற்கான உதவி எண்கள்:
+977 – 980 860 2881 (வாட்ஸ்அப் அழைப்பும் கூட)
+977 – 981 032 6134 (வாட்ஸ்அப் அழைப்பும் கூட)