சுவிட்சர்லாந்தின் உணவு நிறுவனம் நெஸ்லே, தனது தலைமை நிர்வாக அதிகாரி (CEO) லாரன்ட் ஃபிரெக்ஸை பதவியில் இருந்து நீக்கியுள்ளது. நிறுவன விதிமுறைகளை மீறியதாக குற்றச்சாட்டு எழுந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஃபிரெக்ஸ், தன்னுடன் நேரடியாக பணியாற்றும் ஒரு பணியாளருடன் காதல் உறவு வைத்திருந்ததை மறைத்தது காரணமாக விசாரணை தொடங்கப்பட்டது.
நெஸ்லே தலைவர் பால் புல்க் மற்றும் சுயாதீன இயக்குநர் பாப்லோ இஸ்லா தலைமையில் நடந்த விசாரணைக்குப் பிறகு, ஃபிரெக்ஸ் பணி நீக்கம் செய்யப்பட்டார். இந்த பணி நீக்கம் உடனடியாக அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..
அவரின் இடத்தில், நெஸ்பிரெசோ காபி பிரிவை வழிநடத்திய பிலிப் நாவ்ராட்டில் புதிய CEOவாக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பரில் CEOவான ஃபிரெக்ஸ், நெஸ்லேவில் 40 ஆண்டுகளாக பணியாற்றியிருந்தாலும், அவருக்கு பதவி விலகல் தொகுப்பு வழங்கப்படாது என நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த விவகாரம், நிறுவன உள்கட்டுப்பாடு மற்றும் மேல்நிலை நிர்வாகிகளின் நடத்தை குறித்து சர்வதேச அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. கடுமையான நுகர்வோர் சூழல் மற்றும் அமெரிக்க வர்த்தக கட்டணங்கள் குறித்த நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில் ஃப்ரீக்ஸின் திடீர் விலகல் நிறுவனத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது..
நெஸ்லே தலைவர் பால் புல்கே இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “இது ஒரு அவசியமான முடிவு. நெஸ்லேவின் மதிப்புகள் மற்றும் நிர்வாகம் எங்கள் நிறுவனத்தின் வலுவான அடித்தளமாகும். நெஸ்லேவில் லாரன்ட் பல வருடங்கள் பணியாற்றியதற்கு நான் நன்றி கூறுகிறேன்” என்று கூறினார்.
ஃப்ரீக்ஸ் நிர்வாகக் குழுவில் இல்லாத ஒரு ஊழியருடன் காதல் உறவில் இருந்ததாக கூறப்படுகிறது.. நெஸ்லே செய்தித் தொடர்பாளர் ஒருவர் இதுகுறித்து பேசிய போது, “நாங்கள் எல்லா நேரங்களிலும் சிறந்த நடைமுறை நிறுவன நிர்வாகத்திற்கு ஏற்ப செயல்பட்டோம். ஆரம்ப உள் விசாரணைக்குப் பிறகு வெளிப்புற விசாரணை தொடங்கப்பட்டது, இன்றைய முடிவு குற்றச்சாட்டுகள் மற்றும் விசாரணைகளை நாங்கள் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம் என்பதைக் காட்டுகிறது.” என்று தெரிவித்தார்..
இந்தச் சம்பவத்தால், நிறுவன மேல்நிலை நிர்வாகிகளின் நடத்தை பேசு பொருளாகி உள்ளது.. குறிப்பாக அமெரிக்காவில் இது தீவிரமாக உள்ளது. சமீபத்தில் ஆஸ்ட்ரோனமர் நிறுவனத்தின் CEO ஆண்டி பைரன், கோல்ட்ப்ளே கச்சேரியில் ஒரு பணியாளரை அணைத்துக் கொண்டிருக்கும் காட்சி கேமராவில் வெளிவந்ததால், ஜூலை மாதத்தில் ராஜினாமா செய்ய வேண்டியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.