காலையில் எழுந்தவுடன் காஃபி குடிப்பதோ அல்லது பழங்களை சாப்பிடுவதோ பலரின் பழக்கமாக உள்ளது. ஆனால், ஒரு சில உணவுகளை வெறும் வயிற்றில் உட்கொள்ளும்போது அது செரிமான அமைப்பைச் சேதப்படுத்தும் என்றும், அஜீரணம், அமிலத்தன்மை மற்றும் வாயு போன்ற பல உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்றும் சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். வெறும் வயிற்றில் ஒருபோதும் சாப்பிடக்கூடாத 8 முக்கியமான உணவுகள் மற்றும் பானங்கள் குறித்த விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
வெறும் வயிற்றில் தவிர்க்க வேண்டிய 8 உணவுகள் :
காஃபி : காலையில் எழுந்து படுக்கையில் காபி குடிக்கும் பழக்கம் பலருக்கு உள்ளது. ஆனால், வெறும் வயிற்றில் காபி குடிப்பதால் வயிற்றில் அமில உற்பத்தி அதிகமாகிறது. இது நெஞ்செரிச்சல் மற்றும் அஜீரணக் கோளாறுக்கு வழிவகுக்கும். மேலும், காபியில் உள்ள காஃபின், மன அழுத்த ஹார்மோன்களான கார்டிசோலின் அளவை அதிகரித்து, தேவையற்ற பதற்றத்தையும் உண்டாக்கலாம்.
சிட்ரஸ் பழங்கள் : ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை போன்ற புளிப்புச் சுவையுள்ள பழங்களில் இயற்கையாகவே அமிலத்தன்மை அதிகமாக உள்ளது. வெறும் வயிற்றில் இவற்றைச் சாப்பிடுவது வயிற்றில் அமிலத் தன்மையையும், வாயுப் பிரச்சனைகளையும் மிகவும் அதிகரிக்கும். இவற்றைச் சாப்பிடுவதற்குப் பதிலாக, உணவுக்குப் பிறகு அல்லது வேறு சில உணவுகளுடன் சேர்த்துச் சாப்பிடுவது நல்லது.
வாழைப்பழங்கள் : பொதுவாக ஆரோக்கியமான உணவாகக் கருதப்படும் வாழைப்பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிடுவது, இரத்தத்தில் மெக்னீசியம் அளவை சட்டென்று அதிகரிக்க செய்து, இதயத்தின் செயல்பாட்டைப் பாதிக்கலாம். மேலும், அதில் உள்ள சர்க்கரைகள் இன்சுலின் அளவை உயர்த்தி, சிறிது நேரம் கழித்து உங்களுக்குச் சோர்வை உண்டாக்கி, மீண்டும் பசியைத் தூண்டலாம்.
தயிர் : தயிரில் செரிமானத்திற்கு உதவும் புரோபயாடிக்குகள் (நல்ல பாக்டீரியாக்கள்) உள்ளன. இருப்பினும், வெறும் வயிற்றில் இருக்கும்போது, வயிற்றில் சுரக்கும் ஹைட்ரோகுளோரிக் அமிலம், தயிரில் உள்ள இந்த நல்ல பாக்டீரியாக்களை அழித்துவிடுகிறது. இதனால், தயிர் சாப்பிடுவதால் கிடைக்கும் முழுமையான ஆரோக்கியப் பயன்களை உடலால் பெற முடியாமல் போகிறது.
பேஸ்ட்ரிகள் மற்றும் சர்க்கரை உணவுகள் : காலையில் டோனட்ஸ், கேக்குகள் அல்லது வேறு ஏதேனும் இனிப்புகளைச் சாப்பிடுவது ரத்த சர்க்கரை அளவை வேகமாக அதிகரிக்கச் செய்து, பின்னர் அது வேகமாகவே குறையவும் செய்யும். இந்தச் சர்க்கரை ஏற்ற இறக்கம் நாள் முழுவதும் நீங்கள் சோர்வாகவும், மீண்டும் மீண்டும் பசி எடுப்பது போலவும் உணரச் செய்யும்.
கார்பனேற்றப்பட்ட பானங்கள் : சோடா போன்ற கார்பனேற்றப்பட்ட பானங்களை வெறும் வயிற்றில் குடிப்பது வயிற்றில் உப்புசத்தை ஏற்படுத்தும். மேலும், அதில் உள்ள சர்க்கரையும் செயற்கைப் பொருட்களும் வயிற்றுக்குள் எரிச்சலையும், குமட்டலையும் உண்டாக்கும்.
தக்காளி : தக்காளியில் டானிக் அமிலம் அதிக அளவில் உள்ளது. வெறும் வயிற்றில் தக்காளியைச் சாப்பிடுவது வயிற்று அமிலத் தன்மையை அதிகரித்து, நாளடைவில் இரைப்பை புண்களுக்கு (Gastric Ulcers) வழிவகுக்கலாம்.
குளிர் பானங்கள் : காலையில் எழுந்தவுடன் குளிர்சாதனப் பெட்டியில் இருந்து எடுத்த குளிர்ந்த நீர் அல்லது குளிர்ந்த சாறுகளைக் குடிப்பது, செரிமான அமைப்பின் செயல்பாட்டை மெதுவாக்கி, உடலின் வளர்சிதை மாற்றத்தையும் பாதிக்கலாம். அதற்குப் பதிலாக, காலையில் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.



