விடுபட்ட குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 விரைவில் வழங்கப்படும் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர்; மருத்துவம், கால்நடை மருத்துவம், பொறியியல், கலை அறிவியல், செவிலியர் கல்லுாரிகள் என அனைத்து கல்லூரிகளும் தொடங்கப்பட்டுள்ளது. 12-ம் வகுப்பு முடிப்பவர்களுக்கு தேவையான உயர்கல்வி கிடைக்கிறது. அவர்களின் கல்வி கட்டணத்தை அரசே செலுத்துகிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கியுள்ளோம். அனைத்து கல்வியிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு இந்த கல்வி ஆண்டு முதல் அமல்படுத்தப்படும்.
இலவச மனைப் பட்டா முன்பு 400 சதுர அடி வழங்கப்பட்டது. இப்போது முதன்முதலில் 800 சதுர அடியில் இலவச மனைப் பட்டா வழங்கப்படுகிறது. இதில் அனைவரும் வீடு கட்ட வேண்டியது முக்கியம்.பட்டியலின மக்கள் கல்வீடு கட்டும் திட்டத்தில் ரூ.7 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தேன். விரைவில் அந்த ரூ.7 லட்சம் வழங்கப்படும். குடும்பத் தலைவிக்கு அறிவித்த உதவித் தொகை கொடுக்கப்படும். விடுபட்ட குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 விரைவில் வழங்கப்படும்.
குடிசை வீடு இல்லாத மாநிலமாக புதுச்சேரி திகழ வேண்டும் என்பது தான் நமது எண்ணம். அந்த எண்ணம் 90 விழுக்காடு நிறைவேறியுள்ளது. கல் வீடுகள் கட்டப்பட்டதால், தீ விபத்துகள் புதுச்சேரியில் குறைந்துள்ளது. ஒவ்வொரு திட்டத்தையும் மக்களுக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து அரசு செயல்படுத்தி வருகிறது. எந்த மாநிலத்திலும் சிறப்புக்கூறு நிதி பட்டியலின மக்களுக்கு தனியாக ஒதுக்கவில்லை. பல ஆண்டுக்கு முன்பே புதுச்சேரியில் தான் சிறப்புக்கூறு நிதியை அரசு ஒதுக்கியது. வழக்கமாக ஒதுக்கப்படும் நிதியை விட இந்த ஆண்டு ரூ.150 கோடி உயர்த்தி ரூ.525 கோடி ஒதுக்கியுள்ளோம்.
பட்டியலின மற்றும் பழங்குடியின மக்கள் சிறப்பாக வாழ வேண்டும் என்பதற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நல்ல வீடு இருந்தால் அவர்களுக்கு மதிப்பு ஏற்பட்டு, வாழ்க்கைத் தரம், பொருளாதாரம் உயரும். பட்டிலின மக்களின் குழந்தைகளின் கல்வி சிறப்பாக இருக்க வேண்டும். அரசு பள்ளியிலும் பிள்ளைகள் படிக்க வேண்டும். விருப்பம் உள்ள பள்ளி மற்றும் கல்லூரியில் படிப்பதற்கான நிதியை அரசு கொடுக்கும். இதுபோல் ரூ.65 கோடியை அரசு கொடுத்துள்ளது என்றார்.