சமூக ஊடகங்களில் பகிரப்படும் AI (செயற்கை நுண்ணறிவு) மூலம் உருவாக்கப்பட்ட உள்ளடக்கங்கள் தொடர்பாக, இந்திய அரசு கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. AI மூலம் உருவாக்கப்பட்ட அல்லது மாற்றப்பட்ட எந்த உள்ளடக்கமாக இருந்தாலும், அதை தெளிவாக குறிச்சொல் (label) மூலம் அடையாளம் காட்ட வேண்டும் என்ற புதிய விதியை அரசு கொண்டு வந்துள்ளது.
இது வெறும் “AI content” என்று பெயரளவில் குறிப்பிடுவது மட்டும் அல்ல. தெளிவாகக் காணக்கூடிய குறிச்சொற்களும் (visible tags), மெட்டாடேட்டாவும் (metadata) கட்டாயமாக சேர்க்கப்பட வேண்டும். அதனால், படங்கள், வீடியோக்கள், குரல் பதிவுகள் போன்றவை உண்மையா அல்லது போலியா என்பதை ஒரே பார்வையில் யாரும் கண்டறிய முடியும். மேலும், எதிர்ப்புக்குரிய (objectionable) பதிவுகள் குறித்து புகார் அளிக்கப்பட்டால், அவற்றை 3 மணி நேரத்திற்குள் நீக்க வேண்டும் என்றும் விதிமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY), தகவல் தொழில்நுட்ப விதிகள் – 2021 என்பவற்றில் இந்த புதிய வரைவு திருத்தங்களை தயாரித்துள்ளது. இந்த விதிகள், குறிச்சொல் வைப்பதை மட்டும் நோக்கமாகக் கொள்ளவில்லை. சட்டவிரோதமான, பாலியல் சுரண்டலுக்குரிய, தவறான தகவலை பரப்பும் AI உள்ளடக்கங்களை வைரலாகும் முன்பே கண்டறிந்து தடுக்க, தானியங்கி கருவிகளை (automated tools) பயன்படுத்த வேண்டும் என்றும் சமூக ஊடக தளங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
AI மூலம் உருவாக்கப்பட்ட உள்ளடக்கங்கள் குறித்த அரசு புதிய விதிகள்
AI மூலம் உருவாக்கப்பட்ட அனைத்து உள்ளடக்கங்களிலும், அது செயற்கையாக உருவாக்கப்பட்டது என்பதை காட்டும் தெளிவான குறிச்சொல் அல்லது மெட்டாடேட்டா கட்டாயம் இருக்க வேண்டும்.
இந்த குறிச்சொற்கள் மறைக்கப்படவோ, நீக்கப்படவோ கூடாது. அந்த அடையாளம் நிரந்தரமாக இருக்க வேண்டும்.
படங்களுக்கான (visuals) குறிச்சொல், அந்த படத்தின் குறைந்தது 10 சதவீத பகுதியை உள்ளடக்க வேண்டும்.
ஆடியோ அல்லது வீடியோ உள்ளடக்கங்களில், அந்த குறிச்சொல் முதல் 10 சதவீத நேரத்தில் தெளிவாக தோன்ற வேண்டும்.
இதன் மூலம், உள்ளடக்கம் உண்மையா அல்லது AI உருவாக்கமா என்பதை மக்கள் ஊகிக்க வேண்டிய நிலை இருக்காது.
கூடுதல் பாதுகாப்பு விதிகள்
சமூக ஊடக தளங்கள், பயனர்கள் பதிவேற்றும் உள்ளடக்கம் செயற்கையாக உருவாக்கப்பட்டதா என்பதை கேட்டு உறுதி செய்ய வேண்டும். அதேசமயம், அந்த தகவலை தங்களின் சரிபார்ப்பு கருவிகள் மூலம் உண்மையா என்று சோதிக்கவும் வேண்டும்.
மேலும், சட்டவிரோத அல்லது ஏமாற்றும் AI உள்ளடக்கங்களை தடுக்க, தானியங்கி கண்காணிப்பு முறைகள் செயல்படுத்தப்பட வேண்டும். இந்த AI விதிகளை மீறினால் ஏற்படும் தண்டனைகள் குறித்து, பயனர்களுக்கு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நினைவூட்டல் அனுப்ப வேண்டும் என்றும் விதிமுறையில் கூறப்பட்டுள்ளது.
இந்த மாற்றங்கள் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூ டியூப், எக்ஸ் போன்ற பெரிய சமூக ஊடக தளங்களுக்கு மிகப் பெரிய மாற்றமாகும். இதுவரை AI உள்ளடக்கங்கள் குறித்து வெளிப்படையாக தெரிவிப்பது விருப்பத்தின் அடிப்படையில் இருந்தது. ஆனால் இப்போது, அது சட்டபூர்வ கட்டாயமாக மாற்றப்பட்டுள்ளது. இனி கட்டாய வெளிப்படைத்தன்மை தான் நடைமுறையாகும்.
சமீப காலமாக, டீப் ஃபேக் (deepfake) வீடியோ, ஆடியோ போன்றவை அதிகமாக பரவி, மக்களைத் தவறாக வழிநடத்தியும், சிலருக்கு அவப்பெயரையும் ஏற்படுத்தி உள்ளன.. இதன் காரணமாகவே இந்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பீகார் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, AI மூலம் தயாரிக்கப்படும் தேர்தல் பிரச்சார உள்ளடக்கங்களுக்கு குறிச்சொல் வைக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
போலி ஊடகங்கள் ஜனநாயக செயல்முறையை பாதிக்கக்கூடும் என்ற கவலை அரசுக்கு உள்ளது. இதனால், X போன்ற சமூக ஊடக தளங்களுக்கு, அசிங்கமான அல்லது அவதூறான AI உருவாக்கப்பட்ட உள்ளடக்கங்களை உடனடியாக நீக்க வேண்டும் என்று அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Read More : AI உள்ளடக்கம்.. சமூக ஊடகங்கள் கட்டாயம் இதை செய்ய வேண்டும்..! மத்திய அரசின் புதிய விதிகள்..!



