தற்போதைய டிஜிட்டல் காலகட்டத்தில் அனைவரிடமுமே வங்கிக் கணக்கு இருக்கும். வாடிக்கையாளர்கள் தங்களுடைய மதிப்புமிக்க ஆவணங்கள், நகைகள் போன்றவை பாதுகாப்பாக வைக்க வங்கி லாக்கர் சேவையை நாடுவது வழக்கம். இதனை மேலும் பாதுகாப்பானதாக மாற்றும் நோக்கத்தில், ரிசர்வ் வங்கி புதிய கட்டுப்பாடுகளையும், புதிய விதிகளையும் கடந்த சில ஆண்டுகளில் எடுத்து வந்துள்ளது. தற்போது, இந்த நடவடிக்கைகள் இன்னும் தீவிரமாக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு அம்சங்களை வலுப்படுத்தும் நோக்கில், அனைத்து வங்கி லாக்கர் அறைகளிலும் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் சிசிடிவி கேமரா கட்டாயமாக பொருத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த கேமராவில் பதிவாகும் காட்சிகளை குறைந்தபட்சம் 180 நாட்கள் பராமரிக்க வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து, லாக்கரை திறப்பதற்கான நடைமுறைகளிலும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இனி வாடிக்கையாளர்கள் கருவிழி அடையாளம் அல்லது கைரேகை உறுதிப்படுத்தலின்றி லாக்கரை திறக்க இயலாது. மேலும், ஒவ்வொரு முறையும் லாக்கர் அணுகும் தகவல் குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் வழியாக வாடிக்கையாளருக்கு அனுப்பப்படும்.
வாடிக்கையாளர்களுடன் வங்கிகள் ஒருவிதமான சட்டப்பூர்வ ஒப்பந்தத்தில் ஈடுபட வேண்டும். இந்த ஒப்பந்தத்தில், இருபக்கங்களின் உரிமை மற்றும் பொறுப்புகள் தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும். இதற்கான காலக்கெடு டிசம்பர் 2025 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தங்கள் ஸ்டாம்ப் பேப்பரில் மேற்கொள்ளப்பட வேண்டும். அதற்கான செலவுகளை வங்கிகளே ஏற்க வேண்டும்.
இதுவரை, லாக்கரில் உள்ள பொருட்கள் காணாமல் போனாலோ அல்லது திருடப்பட்டாலோ வங்கிகள் நேரடியாக பொறுப்பு ஏற்கவில்லை. ஆனால் புதிய விதிகளின்படி, வாடிக்கையாளர் செலுத்தும் ஆண்டு கட்டணத்தின் 100 மடங்கு வரை நஷ்டஈடு வழங்க வங்கிகள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளன. உதாரணமாக, ஆண்டுக்கான கட்டணமாக ரூ.2,500 செலுத்தும் ஒருவருக்கு ரூ.2.5 லட்சம் வரை இழப்பீடு வழங்கப்படலாம். இவ்விதி இயற்கை பேரழிவுகள் உள்ளிட்ட சில சூழ்நிலைகளை மட்டும் விலக்குகிறது.
மேலும், லாக்கர் உரிமையாளர் திடீரென இறந்துவிட்டால், அவரால் நியமிக்கப்பட்ட நாமினி, தேவையான ஆவணங்களை வழங்கி 15 நாட்களுக்குள் லாக்கரைத் திறக்கும் உரிமை பெற்றிருப்பார்.
அத்துடன், லாக்கரில் வைக்கக்கூடிய பொருட்கள் குறித்தும் புதிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆயுதங்கள், வெடிபொருட்கள், ரொக்கப் பணம் மற்றும் போதைப்பொருட்கள் போன்றவை லாக்கரில் வைக்கக் கூடாது. இந்த விதிகளை மீறும் சந்தைகளுக்கு வங்கி ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கூடியதோடு, சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும்.
மேலும், வங்கிகள் வழங்கும் லாக்கர் சேவைகள், முறையான பயன்பாட்டிற்கும், அதிகபட்ச பாதுகாப்பிற்கும் வழிவகுப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர்களுக்கான நம்பிக்கையையும் வெளிப்படைத்தன்மையையும் இந்த புதிய சட்டங்கள் அதிகரிக்கும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.