40 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஓட்டுநர் உரிமம் பெற இனி மருத்துவச் சான்றிதழ் கட்டாயம் என தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையம் அறிவித்துள்ளது.
ஓட்டுநர் உரிமம் என்பது அரசு வழங்கும் ஒரு சட்டபூர்வமான ஆவணமாகும். இது, ஒருவர் சாலையில் வாகனங்களை ஓட்டுவதற்கு தகுதியானவர் என்பதற்கான அங்கீகாரமாக செயல்படுகிறது. இருசக்கர வாகனங்கள், கார்கள், லாரிகள், பேருந்துகள் என எந்த வகையான வாகனமாக இருந்தாலும், அதை சாலையில் ஓட்டுவதற்கு ஓட்டுனர் உரிமம் கட்டாயம்.
இந்த உரிமம், மண்டல போக்குவரத்து அலுவலகம் (RTO) மூலம், மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுவது சட்டப்படி தவறாகும். அப்படி லைசென்ஸ் இல்லாமல், வாகனங்கள் இயக்கினால் காவல்துறையினர் உங்களை பிடிக்கும்போது அபராதம் விதிப்பார்கள்.
ஓட்டுநர் உரிமம் பெற என்ன ஆவணங்கள் தேவை..?
ஒருவர் புதிய ஓட்டுநர் உரிமம் பெற அல்லது அதனை புதுப்பிக்க விரும்பினால், கீழ்காணும் ஆவணங்களில் ஏதேனும் ஒரு ஆவணங்களை தயாராக வைத்திருக்க வேண்டும்.
* வயதுச் சான்றுக்கு பிறப்புச் சான்றிதழ்/பான் கார்டு/10ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்/பள்ளியின் மாற்றுச் சான்றிதழ் (TC)
* முகவரிச் சான்றுக்கு ஆதார் அட்டை/வாக்காளர் அடையாள அட்டை/ரேஷன் கார்டு
* மற்ற ஆவணங்கள் : முறையாக நிரப்பப்பட்ட விண்ணப்பப் படிவம்/சமீபத்திய பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள்
மருத்துவ சான்றிதழ் கட்டாயம் :
இந்நிலையில் தான், 40 வயதை கடந்தவர்கள் ஓட்டுநர் உரிமம் பெறவோ அல்லது உரிமத்தை புதுப்பிக்கவோ விரும்பினால், பதிவு பெற்ற மருத்துவரால் வழங்கப்பட்ட மருத்துவச் சான்றிதழ் கட்டாயமாக வேண்டும். இந்த சான்றிதழ் இல்லாத விண்ணப்பங்கள் ஏற்கப்படாது என்று தமிழக போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையம் அறிவித்துள்ளது.
இது மத்திய மோட்டார் வாகன விதிகள் 5-ஆம் விதிப்படி அமையும். எனவே, 40 வயதுக்கு மேற்பட்ட நபர்கள், உரிமம் பெறும் முன் மருத்துவ சோதனை செய்து சான்றிதழ் பெற வேண்டியது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.