தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதையொட்டி, புத்தாடைகள் மற்றும் பட்டாசுகள் வாங்குவதில் மக்கள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். பொதுவாக, தரமான மற்றும் மலிவு விலை வெடிகளை வாங்க வேண்டும் என்ற விருப்பத்துடன் பலர் சிவகாசியை நோக்கிப் படையெடுப்பது வழக்கம். ஆனால், தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு அந்த சிரமத்தைத் தவிர்க்கும் வகையில், அரசு கூட்டுறவு பண்டகச் சாலையிலேயே சிவகாசியில் தயாரிக்கப்படும் தரமான பட்டாசுகள் மிகக் குறைந்த விலையில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது, பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த ஆண்டு பட்டாசுக்கான விலை உயரும் என்ற எதிர்பார்ப்பு நிலவிய சூழலில், அரசுப் பண்டகச் சாலையில் விற்பனை செய்யப்படும் பட்டாசுகள் விலை குறைவாக இருப்பது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அத்துடன், பொதுமக்களுக்கு மேலும் ஊக்கமளிக்கும் வகையில், விலையில் கூடுதலாக 5% தள்ளுபடியும் வழங்கப்பட்டுள்ளதால், பண்டக சாலைக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பட்டாசுகளை வாங்கிச் செல்கின்றனர்.
இது குறித்துப் பேசிய பண்டகச் சாலை மேலாளர், “தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலின்படி, மக்கள் பாதுகாப்பாகவும், அதே சமயம் குறைந்த விலையிலும் பட்டாசுகளை வாங்க வேண்டும் என்பதற்காகவே இந்தக் கூட்டுறவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களிடமிருந்து மட்டுமே தரமான பட்டாசுகளைக் கொண்டு வந்துள்ளோம். பண்டகச் சாலையில் வாடிக்கையாளர்கள் வந்து செல்லவும், வெடிகளை வைக்கவும் இடவசதி செய்யப்பட்டுள்ளது. இங்கு போதுமான வாகன நிறுத்தும் வசதியும் உள்ளது,” என்று தெரிவித்தார்.
மேலும், இந்த ஆண்டு குழந்தைகளைக் கவரும் வகையில், அவெஞ்சர்ஸ், லெமன் ட்ரீ போன்ற பெயர்களில் புதுமையான வெடி ரகங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. அதேபோல், வெடிகளை வாங்கும் பொதுமக்கள் கண்டிப்பாகப் பாதுகாப்பு விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். “பட்டாசுகளைச் சூடான அல்லது ஈரப்பதமான இடத்தில் வைக்காமல், வறண்ட இடத்தில் பாதுகாப்பாக வைக்க வேண்டும். சிறுவர்கள் பட்டாசுகளைத் தனியாக வெடிக்க அனுமதிக்கக் கூடாது. தீயின் அருகில் பட்டாசுகளை வைக்க வேண்டாம்” என்று எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.