கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த கோபசந்திரம் அருகே நேற்று அதிகாலை 3.30 மணியளவில் பெங்களூருவிலிருந்து கிருஷ்ணகிரி நோக்கிச் சென்றுகொண்டிருந்த சரக்கு வாகனம், இரண்டு லாரிகள் மற்றும் கார் என 4 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்டன. இந்த விபத்து காரணமாக சாலையில் சிறிது குழப்பம் ஏற்பட்ட நிலையில், அதே சமயம் அந்த வழியாக அதிவேகமாக வந்த ஒரு சரக்கு லாரி, ஏற்கனவே விபத்தில் சிக்கியிருந்த கார் மீது மீண்டும் மோதியது.
இந்த பயங்கர விபத்தில் கார் அப்பளம் போல நொறுங்கியதில், காருக்குள் இருந்த 4 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். இதையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த அட்கோ காவல்துறையினர், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், உயிரிழந்தவர்கள் ஈரோட்டை சேர்ந்த மதன்குமார் (27), ஓமலூரைச் சேர்ந்த முகிலன் (30), கன்னங்குறிச்சியைச் சேர்ந்த கோகுல் (27) மற்றும் காமலாபுரத்தைச் சேர்ந்த மணிவண்ணன் (27) என்பது தெரியவந்தது. நண்பர்களான இவர்களில், மதன்குமார் கனடாவில் பணிபுரிந்து வந்துள்ளார். அவருக்கு 5 மாதங்களுக்கு முன்னர் தான் திருமணம் நடந்துள்ளது. அவரது மனைவி, தலை தீபாவளியை கொண்டாட ஒரு மாதம் முன்பே ஈரோட்டிற்கு வந்துவிட்ட நிலையில், மதன்குமார் கனடாவில் இருந்து நேற்று முன்தினம் இரவு விமானம் மூலம் பெங்களூரு வந்திருக்கிறார்.
நண்பர்களான மற்ற மூவரும், மதன்குமாரை காரில் ஈரோட்டிற்கு அழைத்து வரும்போதுதான் இந்த விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது. இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், கர்நாடக மாநிலம் சித்திர துர்காவைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் கிரிஷ் (30) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலை தீபாவளி கொண்டாட இருந்த புதுமாப்பிள்ளை விபத்தில் சிக்கி உயிரிழந்திருப்பது குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.