தமிழக அரசியல் களத்தில் வாரிசு அரசியலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், சட்டப்பேரவைத் தலைவர் (சபாநாயகர்) அப்பாவுவின் மகன் அலெக்ஸ் அப்பாவு, நெல்லை மாவட்டத்தில் முக்கிய அமைப்புப் பொறுப்பைப் பெற்றுள்ளார். அவர் வள்ளியூர் வடக்கு திமுக ஒன்றியச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சபாநாயகர் அப்பாவு, ராதாபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக (எம்.எல்.ஏ.) இருக்கிறார். இவர் 1996 ஆம் ஆண்டு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பாகவும், 2001-இல் சுயேட்சையாகவும், 2006 மற்றும் 2021 தேர்தல்களில் திமுக சார்பிலும் போட்டியிட்டு ராதாபுரம் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். குறிப்பாக, 2016 தேர்தலில் அதிமுக வேட்பாளர் இன்பதுரையிடம் 49 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததையடுத்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது குறிப்பிடத்தக்கது. இறுதியில் 2021 சட்டமன்றத் தேர்தலில், இன்பதுரையை விட 5 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சட்டமன்ற சபாநாயகர் ஆனார்.
இந்நிலையில், நெல்லை கிழக்கு மாவட்ட திமுக அமைப்பை சமீபத்தில் கிழக்கு மற்றும் மேற்கு என இரண்டாகப் பிரித்தது திமுக தலைமை. நெல்லை மேற்கு மாவட்டச் செயலாளராக ஆவுடையப்பனும், நெல்லை கிழக்கு மாவட்டப் பொறுப்பாளராக கிரகாம்பெல் என்பவரும் நியமிக்கப்பட்டனர். இந்தச் சூழலில், கிரகாம்பெல் வகித்து வந்த வள்ளியூர் வடக்கு திமுக ஒன்றியச் செயலாளர் பதவிக்கு தற்போது சபாநாயகர் அப்பாவுவின் மகன் அலெக்ஸ் அப்பாவு நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே நெல்லை கிழக்கு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளராகப் பதவி வகித்த அலெக்ஸ் அப்பாவுவுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த அமைப்புப் பொறுப்பு, அரசியலில் அவரது அடுத்தகட்ட நகர்வாக பார்க்கப்படுகிறது. அலெக்ஸ் அப்பாவு கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் நெல்லை தொகுதியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்திருந்தார். எனினும், அத்தொகுதி கூட்டணி கட்சியான காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டதால் அவருக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. எனவே, இப்போது வழங்கப்பட்டுள்ள ஒன்றியச் செயலாளர் பொறுப்பு, அவரை வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் ராதாபுரம் அல்லது நெல்லை மாவட்டத்தில் உள்ள வேறு ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட ஆயத்தப்படுத்தும் செயல் திட்டமாகக் கருதப்படுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.