பிரேசிலுக்குப் பிறகு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கனடா மீதும் வரி விதித்துள்ளார். கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 35 சதவீத வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த வரி விதிப்பு ஆகஸ்ட் 1 முதல் அமல்ப்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ள கடிதத்தில், கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அடுத்த மாதம் 35% வரி விதிக்கப்படும் என்றும், பெரும்பாலான பிற வர்த்தக நாடுகள் மீது 15% அல்லது 20% மொத்த வரிகளை விதிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார். மேலும், கனடா பதிலடி கொடுத்தால் இந்த வரி விதிப்பு விகிதம் மேலும் உயர்த்தப்படும் என்றும் டிரம்ப் தெரிவித்தார்.
சமீபத்திய நாட்களில் டிரம்ப் தனது வர்த்தகப் போரை விரிவுபடுத்தியுள்ளார், நட்பு நாடுகளான ஜப்பான் மற்றும் தென் கொரியா உட்பட பல நாடுகள் மீது புதிய வரிகளை விதித்துள்ளார், மேலும் தாமிரத்தின் மீது 50% வரியையும் விதித்துள்ளார் .
வியாழக்கிழமை வெளியிடப்பட்ட NBC செய்திக்கு அளித்த பேட்டியில், இதுபோன்ற கடிதங்களைப் பெறாத பிற வர்த்தக நாடுகள் முழுமையான வரிகளை எதிர்கொள்ள நேரிடும் என்று டிரம்ப் கூறினார். “எல்லோருக்கும் கடிதம் வர வேண்டியதில்லை. அது உங்களுக்குத் தெரியும். நாங்கள் எங்கள் கட்டணங்களை நிர்ணயித்துக் கொண்டிருக்கிறோம்,” என்றும் “மீதமுள்ள அனைத்து நாடுகளும் 20% அல்லது 15% செலுத்த நேரிடும் என்றும் நாங்கள் இப்போது அதைச் சரிசெய்வோம்,” என்று டிரம்ப் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடிதத்தின் மூலம், கனடா மீதான தனது அதிருப்தியை வெளிப்படுத்திய டிரம்ப், ” நாங்கள் கனடாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்வோம், ஆனால் இப்போது வர்த்தகம் புதிய விதிகளின் கீழ் செய்யப்படும். கனடா நமது பால் விவசாயிகள் மீது 400 சதவீத வரி விதிக்கிறது என்று அவர் கூறினார். பால் துறை மற்றும் அமெரிக்காவில் ஃபெண்டானில் போன்ற மருந்துகளின் விநியோகம் குறித்த பிரச்சினையை டிரம்ப் எழுப்பினார். இந்தத் துறை மிகவும் சமநிலையற்றது என்று குறிப்பிட்டுள்ளார்.
கனடாவுக்கு முன்பே பிரேசில் மீது டிரம்ப் வரிகளை விதித்திருந்தார். அவர் 50 சதவீத வரியை அறிவித்திருந்தார். இதற்கு பொருளாதார ரீதியாக பழிவாங்கப்படும் என்று பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் லுலா டா சில்வா எச்சரித்திருந்தார். வரிகள் அதிகரித்தால் பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று லுலா கூறினார். இந்த வாரம் உலகின் பல நாடுகள் மீது டிரம்ப் வரி குண்டுகளை வீசியுள்ளார். இவற்றில் ஜப்பான், தென் கொரியா மற்றும் இலங்கை ஆகியவை அடங்கும்.