மேற்கு வங்கத்தில் நிஃபா வைரஸ் தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருவது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை 5 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் சுகாதாரத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட தொடங்கியுள்ளனர். எல்லையோர மாவட்டங்களில் கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ள தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மக்கள் பதற்றமடைய தேவையில்லை எனத் தெரிவித்துள்ளார்.
விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவும் இந்த ‘ஜூனோடிக்’ (Zoonotic) வகை வைரஸ், குறிப்பாக பழம் தின்னி வௌவால்கள், பன்றிகள் மற்றும் குதிரைகள் மூலம் பரவுகிறது. வௌவால்களின் உமிழ்நீர் அல்லது கழிவுகள் பட்ட பழங்களை உண்பது மற்றும் பாதிக்கப்பட்ட நபர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பது நோய் பரவலுக்கு முக்கிய காரணமாக அமைகிறது. காய்ச்சல், தலைவலி, மூச்சுத்திணறல், வாந்தி மற்றும் மயக்கம் போன்றவை இதன் முக்கிய அறிகுறிகளாகும். பாதிப்பு ஏற்பட்ட 6 முதல் 21 நாட்களுக்குள் இந்த அறிகுறிகள் தென்படும் என்பதால், மேற்கு வங்கப் பகுதிகளுக்குப் பயணம் செய்தவர்கள் இத்தகைய உபாதைகள் இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைகளை அணுக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நிபா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பொது சுகாதாரத் துறை இயக்குநர் வெளியிட்டுள்ள வழிகாட்டுதலில், பொதுமக்கள் தகுந்த தற்காப்பு முறைகளை பின்பற்ற வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக, மரங்களில் இருந்து கீழே விழுந்த அல்லது பறவைகள் கடித்த பழங்களை சாப்பிடக் கூடாது. திறந்த நிலையில் உள்ள பதநீர், கள் போன்ற பானங்களை தவிர்க்க வேண்டும். மேலும், பயன்படுத்தப்படாத பழைய கிணறுகளின் அருகே செல்வதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மாவட்ட சுகாதார அலுவலர்கள் மற்றும் ஆரம்பச் சுகாதார நிலைய மருத்துவர்கள் 24 மணி நேரமும் விழிப்புடன் செயல்பட அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு மேற்கொண்டு வரும் தீவிரத் தடுப்பு நடவடிக்கைகளால் வைரஸ் ஊடுருவல் தடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது. தூய்மைப் பழக்கவழக்கங்களை பின்பற்றுவதுடன், கைகளைச் சோப்பு போட்டு அடிக்கடி கழுவுவதும், உணவுப் பாதுகாப்பு முறைகளை கடைப்பிடிப்பதும் இந்த வைரஸ் பிடியில் இருந்து நம்மை காக்கும் எளிய வழிகளாகும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.
Read More : வாகன ஓட்டிகளுக்கு ஷாக் நியூஸ்..! பெட்ரோல், டீசல் விலையில் பெரும் உயர்வு? விரைவில் முக்கிய முடிவு..!



