நிதிஷ்குமார் முக்கிய அரசியல் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பீகார் மாநிலத்தின் முதல்வர் பதவியிலிருந்து விலகி, ராஜ்ய சபா உறுப்பினராக போட்டியிட முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இது பீகார் மாநில அரசியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
இந்த அறிவிப்புக்குப் பிறகு அவர் அளித்த முதல் பதிலில், தனது அரசியல் வாழ்க்கையில் நீண்ட காலமாக இருந்த ஒரு விருப்பத்தை நிறைவேற்ற விரும்புகிறேன் என்று கூறினார். அதாவது பீகார் மாநில சட்டமன்றத்தின் இரு அவைகளிலும் (சட்டமன்றம் மற்றும் சட்டமன்ற மேலவை) மற்றும் இந்திய பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் (லோக்சபா மற்றும் ராஜ்யசபா) உறுப்பினராக இருப்பதே தனது நீண்டநாள் ஆசை என அவர் தெரிவித்துள்ளார். அந்த நீண்டநாள் ஆசையை கருத்தில் கொண்டு, இந்த முறை நடைபெற உள்ள ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட முடிவு செய்ததாக அவர் கூறினார்.
நிதிஷ் குமார் ராஜ்யசபாவுக்கு செல்ல என்ன காரணம்?
எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், நிதிஷ் குமார் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தன்னை ஆதரித்த பீகார் மக்களுக்கு நன்றி தெரிவித்தார். மக்களின் நம்பிக்கையும் ஆதரவும் தான் மாநிலத்திற்கு முழு அர்ப்பணிப்புடன் சேவை செய்ய உதவியதாக அவர் கூறினார். மேலும் அந்த ஆதரவு காரணமாக பீகார் மாநிலம் வளர்ச்சி மற்றும் மரியாதை என்ற புதிய நிலைக்கு முன்னேறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவர் தனது பதிவில் “கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நீங்கள் தொடர்ந்து என்னிடம் நம்பிக்கையையும் ஆதரவையும் வழங்கி வருகிறீர்கள். அந்த நம்பிக்கையின் வலிமையால் தான் நான் பீகார் மாநிலத்திற்கும் உங்களுக்கும் முழு அர்ப்பணிப்புடன் சேவை செய்ய முடிந்தது. உங்கள் ஆதரவு மற்றும் நம்பிக்கை காரணமாக தான் இன்று பீகார் வளர்ச்சியும் மரியாதையும் கொண்ட புதிய பரிமாணத்தை அடைந்துள்ளது. இதற்காக நான் பல முறை உங்களிடம் நன்றி தெரிவித்துள்ளேன்.
என் பாராளுமன்ற அரசியல் பயணத்தின் தொடக்கம் முதலே பீகார் சட்டமன்றத்தின் இரு அவைகளிலும் மற்றும் இந்திய பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் உறுப்பினராக இருக்க வேண்டும் என்ற ஆசை என் மனதில் இருந்தது. அந்த விருப்பத்தை கருத்தில் கொண்டு இந்த முறை நடைபெறும் ராஜ்யசபா தேர்தலில் உறுப்பினராக ஆக விரும்புகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்..
அதே நேரத்தில் மாநிலத்தில் அமைக்கப்படும் புதிய அரசுக்கு தனது முழு ஒத்துழைப்பும் வழிகாட்டுதலும் இருக்கும் என்றும் நிதிஷ்குமார் தெரிவித்தார். மேலும் “நான் முழு நேர்மையுடன் உறுதி அளிக்க விரும்புகிறேன். எதிர்காலத்திலும் மக்களுடன் எனது உறவு தொடரும். வளர்ச்சியடைந்த பீகாரை உருவாக்க மக்கள் உடன் சேர்ந்து செயல்படுவேன் என்ற என் உறுதி மாறாது. உருவாகும் புதிய அரசுக்கு என் முழு ஒத்துழைப்பும் வழிகாட்டுதலும் இருக்கும்,” என்று அவர் கூறினார்.
பாஜக முதல்வர் வர வாய்ப்பு
இந்த அறிவிப்பு வெளியாகும் முன்பு சில மாதங்களுக்கு முன் என்.டி.ஏ கூட்டணி பீகார் மாநிலத்தில் மீண்டும் ஆட்சிக்கு வந்தது. அந்த கூட்டணிக்கு நிதிஷ்குமார் தலைமை வகித்தார்.. இப்போது அவர் ராஜ்யசபாவுக்கு செல்ல முடிவு செய்ததால் மாநிலத்தில் தலைமை மாற்றம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அதன் அடிப்படையில் பாஜக தலைவர் ஒருவர் முதல்வராக பதவியேற்கலாம் என்று கூறப்படுகிறது.
அப்படி நடந்தால் பீகார் மாநிலத்தில் முதல் முறையாக பாஜக கட்சி முதல்வர் பதவியை பெறும். இதுவரை ஹிந்தி பேசும் மாநிலங்களில் பாஜக முதல்வர் இல்லாத ஒரே மாநிலம் பீகார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் இன்று ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளார். அந்த நேரத்தில் இந்திய ஒன்றிய உள்துறை அமைச்சர் Amit Shah கலந்து கொள்ளலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
நான்கு அவைகளிலும் இருந்த தலைவர்கள்
பீகார் மாநில அரசியலில் இதற்கு முன் மூன்று முக்கிய தலைவர்கள் மாநில சட்டமன்றம், சட்டமன்ற மேலவை, மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய 4 அவைகளிலும் உறுப்பினர்களாக பணியாற்றியுள்ளனர்.
முன்னாள் முதல்வர் லல்லு பிரசாத் யாதவ், மறைந்த பாஜக தலைவர் சுஷில் குமார் மோடி, முன்னாள் எம்.பி. நாக்மாணி குஷாவா ஆகியோர் 4 அவைகளிலும் பணியாற்றி உள்ளனர்..
தற்போது வரை நிதிஷ் குமார் பீகார் சட்டமன்றம், பீகார் சட்டமன்ற மேலவை மற்றும் லோக்சபா ஆகியவற்றில் உறுப்பினராக இருந்துள்ளார். ஆனால் அவர் இதுவரை ராஜ்யசபாவில் உறுப்பினராக இருந்ததில்லை.
இந்த முறை அவர் ராஜ்யசபா தேர்தலில் வெற்றி பெற்றால், இந்தியாவின் மாநில மற்றும் பாராளுமன்ற அமைப்பின் நான்கு முக்கிய சட்டமன்ற அவைகளிலும் உறுப்பினராக இருந்த அரிய சாதனையை நிதிஷ்குமார் பெறுவார் என்பது குறிப்பிட்டத்தக்கது..
Read More : வளைகுடா மோதல் எதிரொலி..! கேஸ் தட்டுப்பாடு வரும்? லட்சக்கணக்கான இந்திய குடும்பங்களுக்கு பாதிப்பு..!



