உலகெங்கிலும் உள்ள 195 நாடுகளில், ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது அதன் ராணுவ பலம், எல்லை ஆதிக்கம் அல்லது பொருளாதார சுதந்திரம் ஆகியவற்றால் பொதுவாக மதிப்பிடப்படுகிறது. ஆனால், இந்த எந்த வரையறைக்குள்ளும் வராத, ஐரோப்பாவின் மையத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய நாடான லிச்சென்ஸ்டீன் (Liechtenstein), வளர்ச்சியடைந்த நாடுகளுக்கான அனைத்து அளவுகோல்களையும் மாற்றி அமைத்துள்ளது. மிகக் குறைந்த வளங்களைக் கொண்டிருந்தாலும், உலகின் மிகவும் பணக்கார நாடுகளில் ஒன்றாக இது பெருமையுடன் திகழ்கிறது.
லிச்சென்ஸ்டீன் தனிப்பட்ட நாணயம், சொந்தமான சர்வதேச விமான நிலையம் போன்ற இறையாண்மையின் சின்னங்கள் எதுவும் இல்லாமல் உள்ளது. இருப்பினும், இங்குள்ள மக்களின் தனிநபர் வருமானம் உலகிலேயே மிகவும் அதிகமாக இருக்கிறது. இந்தச் சிறிய நாடு தன் அண்டை நாடான சுவிட்சர்லாந்தின் நாணயமான சுவிஸ் பிராங்கை (Swiss Franc) பயன்பாட்டிற்காக ஏற்றுக்கொண்டதன் மூலம் வலுவான பொருளாதாரக் கட்டமைப்பைப் பெற முடிந்தது.
லிச்சென்ஸ்டீன் தேவையற்ற அதிக செலவுகளை ஏற்படுத்தும் திட்டங்களைத் தவிர்ப்பதில் மிகுந்த கவனம் செலுத்துகிறது. உதாரணமாக, மத்திய வங்கியின் பராமரிப்புச் சுமையைத் தவிர்ப்பதுடன், சொந்த நாணய மேலாண்மையின் சிக்கல்களில் இருந்தும் தன்னைக் காப்பாற்றிக் கொள்கிறது. மேலும், சுவிட்சர்லாந்து மற்றும் ஆஸ்திரியாவின் போக்குவரத்து வலைப்பின்னல்களைப் பயன்படுத்துவதன் மூலம், பல பில்லியன் டாலர்கள் அளவிலான தேவையற்ற கட்டுமானச் செலவுகளைத் திறமையாகத் தவிர்த்து, அந்த நிதியை மக்களின் நலனுக்காகப் பயன்படுத்துகிறது.
லிச்சென்ஸ்டீனின் உண்மையான பலம் அதன் துல்லியமான தொழில்நுட்பம் மற்றும் புதுமைகளில் அடங்கியுள்ளது. பல் மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் சிறிய கருவிகள் முதல் விண்வெளித் தொழில்நுட்பம் மற்றும் ஆட்டோமொபைல் பாகங்கள் வரை அனைத்தையும் உற்பத்தி செய்யும் துல்லியத் தொழில்துறையில் இது முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. கட்டுமான உபகரணங்களில் உலகளாவிய தலைவரான ஹில்டி (Hilti) போன்ற பல வலிமையான பன்னாட்டு நிறுவனங்களின் தாயகமாக இந்த நாடு திகழ்கிறது.
இங்குள்ள பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை, நாட்டின் மக்கள் தொகையை விட அதிகம் என்ற ஆச்சரியமூட்டும் தகவலும் உள்ளது. இதன் காரணமாக, நாட்டில் வேலையின்மை என்ற பேச்சுக்கே இடமில்லை. குடிமக்களின் தனிநபர் வருமானம் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பெருமை கொள்ளும் லிச்சென்ஸ்டீன், கடன் சுமை இல்லாத நாடாகும். அரசாங்கம் எப்போதும் உபரி வருமானத்தையே ஈட்டுகிறது. மேலும், இந்த நாட்டில் சமூக விரோதச் செயல்கள் முற்றிலும் கிடையாது என்பதும், மொத்த நாட்டிலுமாக ஒரு சில கைதிகள் மட்டுமே சிறையில் உள்ளனர் என்பதும் மற்ற உலக நாடுகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் தகவல் ஆகும்.
குறைந்தபட்ச செலவு, புதுமைகளில் முதலீடு, வலிமையான தொழில்துறை மற்றும் மிக உயர்ந்த பாதுகாப்பு போன்ற காரணிகளால், லிச்சென்ஸ்டீன் பொருளாதாரம் மற்றும் சமூக அமைதி ஆகிய இரண்டிலும் உலக நாடுகளுக்கு முன்மாதிரியாகத் திகழ்கிறது.
Read More : பெண் குழந்தைகள் பிறந்தால் ஆணாக மாற்றும் பெற்றோர்கள்..!! இப்படி ஒரு விநோத பழக்கமா..? எங்கு தெரியுமா..?



