தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. பிரதான கட்சிகள் சார்பில் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.. ஒருபுறம் வேட்பாளர் நேர்காணலும் நடைபெற்று வருகிறது.. அந்த வகையில் விசிக சார்பில் இன்று முதல் விருப்பமனு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.. விசிக சார்பில் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் தலைமை அலுவலகத்தில் ரூ.5,000 செலுத்தி விருப்ப மனு அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..
அதன்படி, வேளச்சேரி தொகுதியில் திருமாவளவன் போட்டியிட விசிக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு அளிக்கப்பட்டுள்ளது..
இந்த நிலையில் விசிக தலைவர் திருமாவளவன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் “ அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பாஜக டெல்லி தலைமை கிள்ளுக்கீரையாக நினைக்கிறது.. அதிமுக டெல்லியை தேடி செல்லும் நிலை உருவாகி உள்ளது..” என்று தெரிவித்தார்..
மேலும் திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி இல்லை என்று திருமா விளக்கம் அளித்தார்.. அப்போது “ கூட்டணி ஒப்பந்தம் இன்னும் கையெழுத்தாகவில்லை என்பது உண்மை தான்.. கூட்டணியில் இழுபறி இல்லை, தாமதம் என்றே கூறலாம்.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி நலனுக்கு எதிராக போகாது.. கூட்டணியின் நலன் கருதி போட்டியிடும் இடங்கள் குறித்து முடிவு எடுப்போம்..
பெரிய அளவிலான தொகுதிகளை பெற முடியாத சூழலில் இருக்கிறோம்.. அதை புரிந்து கொண்டு தொண்டர்களின் ஒத்துழைப்பு தேவை.. விசிக வேட்பாளர்களுக்கு நேர்காணல் செய்யும் வாய்ப்பு குறைவு தான்.. இன்றைய அரசியல் சூழலை கருத்தில் கொண்டு முடிவுகளை எடுக்க வேண்டிய சூழலில் இருக்கிறோம்..” என்று தெரிவித்தார்..
தொடர்ந்து ராமதாஸ் – சசிகலா கூட்டணி குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்தார்.. மேலும் “ புதிய கூட்டணிக்கு வாழ்த்துகள்.. தமிழ்நாட்டில் புதிதாக எத்தனை கூட்டணிகள் வந்தாலும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியே வலுவான நிலையில் உள்ளது.. திமுக கூட்டணியே இந்த தேர்தலில் வெற்றி பெறலாம்..” என்றும் கூறினார்..
Read More : திமுக கூட்டணியில் குறைவான தொகுதிகள் தான் கிடைக்கும்.. விசிகவுக்கு எதிரான சக்திகளே அதிகம்.. திருமா வேதனை..!



