பொதுவாக ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர வேண்டுமெனில் கட்டாயம் ஒரு டிகிரியாவது வேண்டும்.. மேலும் நமது ரெஸ்யூமையும் கண்டிப்பாக வழங்க வேண்டும்.. ரெஸ்யூமின் அடிப்படையில் தான் நிறுவனங்கள் விண்ணப்பதார்களை தொடர்பு கொள்வார்கள்.. அதன்பின்னர் நேர்காணல் மூலம் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.. ஆனால் ரெஸ்யூம், டிகிரி, நேர்காணல் இல்லாமல் ஒரு நிறுவனம் வேலைவாய்ப்பை வழங்குவதாக அறிவித்துள்ளது.. அதுவும் ஆண்டுக்கு ரூ.1 கோடி சம்பளத்தில்..
பெங்களூருவில் ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் தான் இந்த தொழில்நுட்ப வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த நிறுவனம், ஆண்டுக்கு ₹60 லட்சத்தை நிலையான ஊதியமாகவும், கூடுதலாக ₹40 லட்சத்தை நிறுவன உரிமை சலுகைகளாகவும் வழங்குகிறது. இந்தப் பதவிக்கு உடனடியாகச் சேர வேண்டும். வாரத்தில் 5 நாட்கள் நேரடியாக அலுவலகம் சென்று பார்க்க வேண்டும்..
Smallest AI இன் நிறுவனர் சுதர்ஷன் காமத் இதுகுறித்து சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரின் பதிவில் “ 4-5 ஆண்டுகள் நேரடி அனுபவம் வேண்டும்.. Next.js, Python மற்றும் React.js ஆகியவை தெரிந்திருக்க வேண்டும்.. நீங்கள் ஒரு நேரடி டெவலப்பராக இருக்க வேண்டும். இது ஒரு ‘மேலாண்மை’ பதவி அல்ல,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவரின் இந்தப் பதிவு 60,000க்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது.. மேலும் இது விவாதப் பொருளாக மாறி உள்ளது. இதுகுறித்து பலரும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.. “ஒரு இளங்கலை பட்டதாரிக்கு மாதத்திற்கு 3.4 லட்சம் சம்பளம் என்பது நல்ல பணம், ஆனால் திருமணமான ஒருவருக்கு அது பரவாயில்லை, அசாதாரணமானது எதுவுமில்லை” என்று கருத்து தெரிவித்தார்.
மற்றொரு பயனர், “இது ஒரு சிறந்த வாய்ப்பு, ஆனால் குறைந்தபட்சம் ஹைபிரிடு வேலை இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்” என்று கருத்து தெரிவித்தார்.