நாட்டின் முன்னணி பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL), தற்போது நாடு முழுவதும் காலியாக உள்ள 394 அப்ரண்டிஸ் (Apprentices) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும், ஆர்வமும் உள்ள இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி இந்தியன் ஆயில் நிறுவனத்தில் தங்களது தொழில்முறை பயணத்தை தொடங்கலாம்.
இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவோ அல்லது சம்பந்தப்பட்ட துறைகளில் டிப்ளமோ (Diploma), பட்டப்படிப்பு (Degree) முடித்தவராகவோ இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 18 முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அரசு விதிகளின்படி ஓபிசி (OBC) பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி/எஸ்டி (SC/ST) பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு (PwBD) 10 முதல் 15 ஆண்டுகள் வரையிலும் வயது தளர்வு வழங்கப்படுகிறது.
விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு அல்லது நேர்காணல் இன்றி, அவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் (Merit List) நேரடியாக தேர்வு செய்யப்படுவார்கள் என்பது இத்திட்டத்தின் சிறப்பம்சமாகும். முதற்கட்டமாக மதிப்பெண் அடிப்படையில் பட்டியலிடப்படும் நபர்கள், பின்னர் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு (Certificate Verification) அழைக்கப்படுவார்கள். இதற்கு விண்ணப்பக் கட்டணம் எதுவும் கிடையாது என்பதால் தகுதியுள்ள அனைவரும் தயக்கமின்றி விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறையை பொறுத்தவரை, டிரேட் அப்ரண்டிஸ் (Trade Apprentice) பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் apprenticeshipindia.gov.in என்ற இணையதளத்திலும், டெக்னீசியன் அப்ரண்டிஸ் மற்றும் இதரப் பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் nats.education.gov.in என்ற இணையதளத்திலும் பதிவு செய்ய வேண்டும். விண்ணப்பிக்க தொடங்கும் தேதி 28.01.2026 ஆகும். இதற்கான கடைசி தேதி 10.02.2026 என அறிவிக்கப்பட்டுள்ளதால், காலதாமதத்தை தவிர்க்க இப்போதே தயாராகுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கூடுதல் விவரங்கள் : https://iocl.com/admin/img/Apprenticeships/Files/7855d48151ab4dfd90fe82651da9641e.pdf



